[X] Close

“வட்டிக்கு கடன் வாங்கிதான் சாப்பிடுகிறோம், உதவ ஆளேயில்லை”- தினக்கூலிகளின் வேதனையான நாட்கள்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

How-daily-wagers-spend-their-days-in-lockdown-period-in-tamilnadu

“இந்தச் சிறிய நுண்ணுயிரி ஹூவா நகரைக் கூட சக்தியற்றதாக்கியது!
நூற்றுக்கணக்கான கிராமங்கள் களையிழந்து மூச்சுத் திணறின,
ஆண்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்;
ஆயிரக்கணக்கான வீடுகள் வெறிச்சோடின..” - (சீன கவிதை)


Advertisement

சீனாவை பிளேக் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டவை இந்த வரிகள் இவை. பிளேக் போன்ற ஒரு கொல்லை நோயாக கொரோனா விஸ்வரூபம் எடுத்து இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊடரங்கு அமலில் இருக்கும் இந்த நாட்களில் சதா உழைத்துக் கொண்டிருந்த மக்கள் தற்போது ஏதும் செய்ய முடியாமல் தங்களது வீட்டிற்குள்ளாகவே முடங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த ஊரடங்கால் எல்லா தரப்பு மக்களுக்கும் பாதிப்புதான் என்றால், தினக்கூலிகளாக, வாரக் கூலிகளாக இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் அந்த உழைக்கின்ற மக்களுக்குத்தான் கூடுதலான சுமையாக அமைந்துள்ளது. அதற்கு டெல்லியில் இருந்து நூற்றுக்கணக்கான கிமீ தூரம் தொழிலாளர்கள் நடந்தே சென்றது அவர்களது அவல நிலைக்கு ஒரு உதாரணம். இந்த முடக்கம் மிகவும் வேதனையான தருணங்களை அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தந்து கொண்டிருக்கிறது. மார்ச் 25ம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை சுமார் 40 நாட்கள் வேலையில்லாத நாட்கள்தான். இந்த வேலையில்லாத நாட்களைத் தினக்கூலிகள் எண்ணி எண்ணிக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.


Advertisement

           image

அப்படி தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலரிடம் ஊரடங்கு நாட்களில் அவர்களது வாழ்க்கை எப்படி செல்கிறது என்பது குறித்து அறிய சில கேள்விகளை முன் வைத்தோம். அவர்கள் அளித்த பதில்கள் நாட்டின் தற்போதைய பரிதாபத்திற்குரிய நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இருக்கிறது.

 சூளைமேட்டினைச் சேர்ந்த கார்ப்பண்டர் செந்தில் என்பவரிடம் அவரது ஊரடங்கு கால வாழ்க்கை குறித்துக் கேட்டோம். அவர் தன்னுடைய வாழ்வில் தற்போது சூழ்ந்திருக்கும் துன்பத்தை விவரித்துக் கொண்டே சென்றார். அவர் கூறுகையில், “வேலை செய்து கொண்டே இருந்த எங்களால் திடீரென வேலை செய்ய முடியாமல் போய்விட்டதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது. அதுவும் இந்த நாட்களில் எங்களுக்கு வேலைகள் அதிகம் இருக்கும். வேலை இருந்து தற்போது செய்ய முடியாத சூழல். முதல் வாரம் மேஸ்திரி ஒரு ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்தார். அடுத்த வாரம் ஒரு 500 ரூபாய் கொடுத்தார். ஆனால், அவரால் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்.


Advertisement

 எங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகிறது. பால், காய்கறிகள் என நாள்தோறும் வாங்க வேண்டியுள்ளது. இது போக, எனக்கும், என்னுடைய அம்மாவிற்கும் மாதந்தோறும் 2000 ரூபாய் வரை மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டியுள்ளது. தற்போது இருக்கும் சூழலில் உடன் இருக்கும் யாரிடமும் பணம் இல்லை. அதனால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள முடியாமல் இருக்கின்றோம். அதனால், வட்டிக்கு வாங்கிதான் செலவுகளைச் செய்து வருகிறோம்.

        image

 20 ஆம் தேதிக்கு மேல் வேலைக்குச் செல்லலாம் என்று செய்திகளில் சொன்னார்கள். நாங்கள் செய்வதோ கார்ப்பண்டர் வேலை. எங்களுக்குப் பொருட்கள் வேண்டுமென்றால், அதற்கான கடைகள் இருந்தால்தான் வேலைக்குச் செல்ல முடியும். போக்குவரத்தும் முக்கியம். போலீசிடம் வேறு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதையெல்லாம் தான், எங்களை வேலைக்குக் கூப்பிட உரிமையாளர்களும் தற்போதைய சூழலில் தயங்குவார்கள். நோய் குறித்த பயம் அவர்களுக்கு இருக்குமல்லவா?. செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. சீக்கிரம் வேலைக்குச் சென்றுவிட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

 அதே பகுதியைச் சேர்ந்த கட்டுமான வேலைகளுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் மேஸ்திரி மணிகண்டன் என்பவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். “5,6 ஆட்களை நான் வேலைக்கு அழைத்துச் செல்வேன். எனக்கு ஒரு நாளைக்கு 900 ரூபாய் சம்பளம் கிடைக்கும். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் வேலை இருக்கும். சில மாதங்களில் 20 ஆயிரத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். சில மாதங்களில் 15 ஆயிரம் வரை கிடைக்கும். தற்போது வேலை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். 10 ரூபாய் வட்டிக்குத்தான் பணம் வாங்கி செலவு செய்து கொண்டிருக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்.

பசங்க பள்ளிக் கூடத்துக்கு போய்க்கிட்டு இருந்தா கூட செலவு கம்மியா ஆகும். ஆனால், அவர்கள் வீட்டிலேயே இருப்பதால் ஏதாவது தீனி வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களைச் சமாளிக்கவே முடியாது. அரசாங்கம் கொடுத்த 1000 ரூபாய் ஒரு சுற்றுக்கும் பற்றாது. வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் எல்லாம் அவர்கள் ஊருக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் திரும்பவும் சென்னை வந்தால்தான் வேலை சூடுபிடிக்கும். வேலையில்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்குனு என்னுடைய மனைவி நடந்தே கோயம்பேட்டிற்குச் சென்று பூ வாங்கிக்கிட்டு வந்து இன்று விற்க பார்த்தாங்க. ஆனா, மக்கள் வெளியே  வராததால் வியாபாரமே இல்லை” என்று கூறினார்.

எம்.எம்.டி.ஏ காலணியைச் சேர்ந்த பெயிண்டர் விஜயகுமார் என்பவர் சிறிய வீடு ஒன்றில் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். அவர் தன்னுடைய நிலைமை குறித்துக் கூறுகையில், “வேலைக்குப் போனா ஒரு நாளைக்கு ரூ500 கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். வேலை நல்லா இருந்தா கொஞ்சம் கூட கிடைக்கும். இப்போது சுத்தமா வேலையில்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த மாசம் வாடகை கொடுக்கல. வாடகைக்காக முன்னாடி ரெடி பண்ணி வச்சிருந்த பணத்தை வச்சு கொஞ்ச நாள் சமாளித்தோம். அப்புறம் முடியல.

image

எனக்கு ரெண்டு பொண்ணு. ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. கர்ப்பமா இருக்கிறதால இப்போ என் வீட்டிலதான் இருக்கு. அதனால், செலவு கூடுதலா இருக்கு. என்னோட சின்ன பொண்ணுக்கும் இந்த மாதம் சம்பளம் வரல. சுத்தமா எதுவுமே செய்ய முடியாம, 12 ஆயிரம் ரூபாய் வட்டிக்குத்தான் வாங்கி செலவு செய்து கொண்டிருக்கிறோம். திரும்பவும் அந்த வட்டியும், அசலும் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த மாதம் கொடுக்காத வாடகையையும் பிறகு கொடுத்துதான் ஆக வேண்டும். இந்த வாடகையை நம்பித்தானே அவர்களும் இருப்பார்கள். ஏற்கனவே எங்களிடம் இருந்த நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டார்கள்.  நகை இருந்தாலும்ஏ ஏதாவது கொஞ்சம் சமாளிக்கலாம்.எங்களுக்கு  ஏதாவது அரசு உதவி செய்தால் நல்லா இருக்கும்” என்றார்.

அரும்பாக்கம் ராணி அண்ணா நகரைச் சேர்ந்த தினக்கூலிகள் சிலர் வேதனையுடன் தங்களது நாட்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். “வேலையில்லாமல் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மளிகைக் கடைகளில் ஓரளவுக்கு சில பொருட்களைத்தான் கடன் வாங்க முடியும். அதிகமாகவும் கொடுக்கமாட்டார்கள். இருக்கிறதை வச்சி சமைத்துச் சாப்பிடுவோம். இல்லையினா பக்கத்துல இருக்கிற அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிடுவோம். வெறும் தண்ணி குடிச்சிட்டு படுக்க முடியாது இல்லையா. வீட்டு உரிமையாளர் வாடகை பில் கொடுத்துவிட்டார்கள். எப்படியும் நாங்கள் வாடகை கொடுத்துத்தான் ஆக வேண்டும். பாதியாவது கொடுத்துவிட்டு மீதியை பிறகு கொடுக்கிறேன் என்று சொல்லலாம். ஒன்றுமே கொடுக்காமல் இருக்க முடியாது. வேலைக்கு போனால் வாரம் 3,600 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இப்ப எதுவுமே இல்லை. சீக்கிரம் வேலைக்குப் போன நல்லா இருக்கும்” என்று ஒருமித்த கருத்தில் அவர்கள் தெரிவித்தார்கள்.

   image

 பெரும்பாலான தினக்கூலிகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கின்றது. இந்த 40 நாட்களுக்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரணம் தேவைப்படுகிறது. அதைக் கூட பொருட்படுத்தாமல் தங்களை வேலைக்குச் சீக்கிரம் அனுப்பிவிட்டால் போதும் என்று தங்களது வேலையின் மீது கருத்தாக இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close