உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள்: தமிமுன் அன்சாரி

உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள்: தமிமுன் அன்சாரி
உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள்: தமிமுன் அன்சாரி

நேர்மையோடு வாழும் எங்கள் மீது அழுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள் என்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டுமே அளித்தோம். இதுதவிர அந்த சந்திப்பின்போது எதுவும் நடக்கவில்லை. கரன்சி பாலிடிக்ஸ்சில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் செங்கேட்டையனிடம் நாங்கள் கூறிய போது, உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் கோரிக்கையை மட்டும் கூறுங்கள் என்றார்.
நாங்கள் களங்கமற்றவர்கள்; நேர்மையானவர்கள். எங்கள் மீது இதுபோன்ற அழுக்கான குற்றச்சாட்டுகளை கூறி உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள். குதிரைபேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோ பதிவு குறித்து எம்எல்ஏ சரவணனே என்னிடம் மறுப்பு தெரிவித்தார் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார். 
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக, தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரத்தில் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாக சரவணன் பேசுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சரவணன் மீது வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்த தமிமுன் அன்சாரி, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com