"என்னால் குடும்பத்துக்கு ஆபத்து நேரக் கூடாது" டிஎஸ்பி ஜோகிந்தர் சர்மா

"என்னால் குடும்பத்துக்கு ஆபத்து நேரக் கூடாது" டிஎஸ்பி ஜோகிந்தர் சர்மா
"என்னால் குடும்பத்துக்கு ஆபத்து நேரக் கூடாது" டிஎஸ்பி ஜோகிந்தர் சர்மா

இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவை நினைவிருக்கிறதா ? தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ஜோகிந்தர் சர்மா என்று சொன்னாலும் அது மிகையல்ல.

கடந்த 2007 இல் நடந்த டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது இந்தியா. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் அந்த ஓவரை வீசினார் ஜோகிந்தர் சர்மா. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பாகிஸ்தானின் மிஸ்பா அவுட்டாக இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்று சாதித்தது.

அதன் பின்பு இந்திய அணிக்காக விளையாடிய ஜோகிந்தர் சர்மா, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இப்போது ஹரியானா மாநில காவல்துறையில் போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் ஜோகிந்தர் சர்மா. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது வரை இந்தியாவில் 8000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் காவல் துறையினர் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா ஹரியானா மாநில வீதிகளில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகிறார். இதனை கண்ட ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகிந்தர் சர்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டியுள்ளது.

தனது பணி குறித்து கிரிக்இன்ஃபோ இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள ஜோகிந்தர் சர்மா " 2017-ல் கிரிக்கெட்டிலிருந்து விலகியது முதல் காவல்துறையில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறேன். காவல் அதிகாரியாக நான் சந்தித்த சவால்களில் தற்போதைய பணி தான் மிகவும் சவாலாக உள்ளது. ஹிசாரில் பணியாற்றி வருகிறேன். மக்களை மட்டுமல்லாமல் காவலர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்" என் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் "தினமும் காலையில் ஆறு மணி முதல் என்னுடைய பணி ஆரம்பமாகும். 24 மணி நேரமும் எவ்வித பணிகளுக்கும் நான் தயாராக இருக்கவேண்டும். பாதுகாப்பாக இருப்பது குறித்த அறிவுரைகளை மக்களுக்குத் தொடர்ந்து வழங்கவேண்டும். தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். என்னைக் காணும் மக்களில் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு செல்ஃபி புகைப்படம் கேட்பார்கள். ஆனால் நிலைமை சரியான பிறகுதான் செல்ஃபி புகைப்படம் எடுக்கமுடியும் என அறிவுறுத்துவேன்" என்றார்.

தனது குடும்பம் குறித்து கூறிய ஜோகிந்தர் " ஹிசாரிலிருந்து 110 கி.மீ தள்ளி உள்ள ரோஹ்டக்கில் நான் வசிக்கிறேன். சாலையில் பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். எனினும் இச்சமயத்தில் தினமும் பல்வேறு மக்களைச் சந்திப்பதால் பாதுகாப்பு கருதி வீட்டுக்குச் செல்லக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். என்னால் என் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com