ஊரடங்கை மீறிய மூன்று மதபோதகர்கள் சென்னையில் கைது...!

ஊரடங்கை மீறிய மூன்று மதபோதகர்கள் சென்னையில் கைது...!
ஊரடங்கை மீறிய மூன்று மதபோதகர்கள் சென்னையில் கைது...!

ஊரடங்கை மீறிய பங்களாதேஷை சேர்ந்த மூன்று மதபோதகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 17 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடுமையான கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி வழங்கப்பட்ட ஓராண்டு சுற்றுலா விசாவில் வைத்துக் கொண்டு மார்ச் 20 ஆம் தேதி பங்களாதேஷை சேர்ந்த ஹுசைன் முகமது அமீர், சலீம் உசேன் மற்றும் ஹுசைன் அப்துல் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பெரியமேட்டில் இவர்கள் ஒரு சில வீடுகளுக்குச் சென்று மக்களைக் குழுக்களாகக் கூட்டியதாலும் சட்டத்தை மீறி மத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அவர்கள் பெரியமேட்டில் உள்ள பெரிய மசூதியில் தங்கியிருந்தனர், மேலும் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக முன்கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவிக்கவோ அல்லது அனுமதி பெறவோ இல்லை. மசூதியில் மத வழிபாடு நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் மத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 51 பி கீழ் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். வெளிநாட்டினர் சட்டத்தின் 13 & 14, ஐபிசி 188, 269 & 271, தொற்று நோய்கள் சட்டப் பிரிவு 3 மற்றும் தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டம் 134, 135 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லி மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com