Published : 13,Jun 2017 07:01 AM

இவங்க ஹாலிவுட் தமிழர்கள்!

List-of-success-Hollywood-Tamil-Actors

பரந்து விரிந்த உலகில், விரிந்து பரந்து கிடக்கிறது தமிழினம். பெயர் தெரியா தீவுகளில் கூட, பெயர் சொல்ல இருக்கிறான் ஏதாவது ஒரு தமிழன். உலக சினிமாவின் கோட்டையான ஹாலிவுட்டில் இருக்க மாட்டானா என்ன? அங்கும் தங்கள் கொடி நாட்டும், ஹாலிவுட் தமிழர்கள் இவர்கள்:

மிண்டி காலிங்:

மிண்டி காலிங், சென்னையில் பிறந்திருந்தால் நடிகை ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் தமிழ்ப் பெண்கள் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையே. அமெரிக்காவில் பிறந்ததால் இப்போது ஹாலிவுட் நடிகை. 'ஹாலிவுட்டின் வெற்றிகரமான பெண்' என்கிறார்கள் இந்த அமெரிக்கத் தமிழச்சியை.
வேரா சொக்கலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட மிண்டி காலிங்கின் அப்பா, தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா சென்ற ஆர்கிடெக்ட். அம்மா ஸ்வாதி, பெங்காலைச் சேர்ந்தவர். மகப்பேறு மருத்துவர். கேம்பிரிட்ஜில் பிறந்த தங்கள் மகளுக்கு அழகான அமெரிக்கப் பெயரைச் சூட்ட நினைத்தனர் பெற்றோர். அப்போது பிரபலமான, 'மோர்க் அண்ட் மிண்டி' என்ற டி.வி.ஷோவின் தாக்கத்தில் மிண்டி என்ற பெயரை மகளுக்கு வைத்தனர் ஆசையாக. வளர்ந்த பிறகு பெயருக்குப் பின்னால் இருந்த Chokalingam-ஐ கொஞ்சம் செதுக்கி, 'kaling' காலிங் என்று மாற்றிக் கொண்டார் மிண்டி. 
'தி 40 இயர்ஸ் ஓல்ட் விர்ஜின்' என்ற ஹாலிவுட் காமெடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மிண்டியை, 'அன்கம்பனிட் மைனர்ஸ்', 'லைசென்ஸ் டு வெட்', 'நைட் அட் மியூசியம்', 'நோ ஸ்டிரிங்ஸ் அட்டாச்ட்', 'தி பைவ் இயர் என் கேஸ்மென்ட்', 'திஸ் இஸ் த எண்ட்' ஆகிய படங்களில் நீங்கள் பார்த்திருக்க முடியும். இன்னும் பல படங்களி பார்க்கலாம் அவரை.

அஜீஸ் அன்சாரி: 

இந்த சென்னை பார்ட்டிதான், அமெரிக்காவின் தற்போதைய மோஸ்ட் வான்டட், ஸ்டாண்ட் அப் காமெடியன். 
மனதை லேசாக்கவும் கூலாக்காவும் வைக்கிற நகைச்சுவையை எவராலும் தந்துவிடமுடியாது ஈசியாக. அது கலை. அந்தக் கலையை அஜீஸ் அன்சாரியின் வாயில் இருந்து கேட்கும்போது மொத்த அமெரிக்காவும் சிரித்துக்கிடக்கிறது அரங்கங்களில். அந்த சிரிப்புச் சத்தங்களுக்கு இடையே வரும் கைதட்டல்களும் கலகலப்பும்தான் அஜீஸின் ஆர்ட்.

'தி ராக்கர்', 'ஃபன்னி பீப்பிள்', 'அப்சர்வ் அண்ட் ரிப்போர்ட்', 'ஐஸ் ஏஜ்: கான்டினென்டல் டிரிப்ட்', 'ஐ லவ் யூ மேன்', 'குரூயல் சம்மர்', 'எபிக்', 'திஸ் இஸ் எண்ட்' உட்பட பல ஹாலிவுட் படங்களில் அஜீஸின் காமெடியில் சிரித்திருக்க முடியும். இது தவிர ஏராளமான டி.வி.சீரியல்களிலும் நடித்திருக்கிற அஜீஸ், எழுத்தாளரும் கூட.

அஜீஸின் அப்பா சவுகத், குடலியல் மருத்துவர். அம்மா பாத்திமாவும் மருத்துவத் துறையில் பணியாற்றுகிறார். இருவரும் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள். தெற்கு கரோலினாவில் உள்ள கொலம்பியாவில் பிறந்தவர் அஜீஸ் அன்சாரி. 'அப்பா அம்மா தமிழ்நாட்டுல இருந்து வந்ததால நிறைய தமிழ்ப்படம் பார்ப்பேன். எனக்கும் தமிழ்ல ஆக்ஷன் படம் பண்ண ஆசை இருக்கு. ஆனா, தமிழ் பேச முடியலை' என்கிறார் அன்சாரி. 

செந்தில் ராமமூர்த்தி:

பிறந்து வளர்ந்ததெல்லாம் சிகாகோ. அப்பா, அம்மா, சகோதரி என எல்லோருமே மருத்துவர்கள். இவரும் மருத்துவத் துறையில் வாழ்க்கையை தொடங்கினாலும் நடிப்பு ஆசை இழுத்துவந்துவிட்டது சினிமாவுக்கு.
’இன் த பிகினிங்’, பிளைண்ட் டேட்டிங், த ஸ்லாமின் சல்மான், இட்ஸ் வொண்டர்ஃபுல் ஆஃப்டர் லைஃப், த லைஃப்கார்டு ஆகிய ஹாலிவுட் படங்களில் இவரை பார்த்திருக்க முடியும். ‘ஷோர் இன் த சிட்டி’ என்ற இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார் செந்தில். இவர் மனைவி, ஓல்கா சோஸ்னோவ்ஸ்கா ஹாலிவுட் நடிகை. இவர்களுக்கு ஹலினா, அலெக்ஸ் என்ற இரண்டு குழந்தைகள்.

ஜெய் சந்திரசேகர்:

ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் என்பதன் சுருக்கம்தான், ‘ஜெய் சந்திரசேகர்’. இவர் தந்தை ஆற்காடு ஜம்புலிங்கம் சந்திரசேகர் மருத்துவர். அம்மா ஹேமாவும் அதே துறையை சேர்ந்தவர்தான். இவர்கள் அமெரிக்காவில் செட்டிலாகிவிட அங்கு பிறந்த ஜெய் சந்திரசேகர், படித்து முடித்துவிட்டு ’புரோக்கன் லிஸார்ட்’ என்ற டிராமா ட்ரூப் மூலம் காமெடி நாடகங்களை நடத்தினார். ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணுவதும் இவரது ஸ்பெஷல். 
புட்டி குரூசர், சூப்பர் ட்ரூப்பர்ஸ், கிளப் டிரெட், தி டியூக்ஸ் ஆப் ஹஜார், தி பேபி மேக்கர்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ள ஜெய் சந்திரசேகரின் லேட்டஸ்ட் படம், சூப்பர் ட்ரூப்பர்ஸ்-2.
பல்வேறு டிவி தொடர்களை இயக்கி நடித்துள்ள இந்த சந்திரசேகரின் மனைவி, சூசன் கிளார்க்கும் நடிகைதான். ஹாலிவுட் நடிகர் செந்தில் ராமமூர்த்தி இவருக்குச் சொந்தம்.

பத்மா லட்சுமி:

பத்மா பார்வதி லட்சுமி வைத்தியநாதன் என்ற பெயரைச் சுருக்கினால், பத்மா லட்சுமி. சென்னையில் பிறந்த பத்மா லட்சுமிக்கு அறிமுகம் தேவையில்லை அதிகம். சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி என்றால் சட்டென்று புரியும் அனைவருக்கும். 21 வயதில் மாடலிங்கில் இறங்கிய பத்மா, கிளிட்டர், தி மிஸ்ட்ரஸ் ஆப் ஸ்பைசஸ் உட்பட சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி சீரியல்களிலும் இவரை பார்த்திருக்கலாம். இந்தியில் இவர் நடித்து வெளியான படம், ‘பூம்’.  அமெரிக்க சேனலில் குக்குங் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர், உணவு தொடர்பான பல புத்தகங்களை எழுதி விருதும் பெற்றிருக்கிறார். 

சுன்க்ரிஷ் பாலா:


சுன்க்ரிஷ் பாலசுப்ரமணியன் என்கிற இந்த பாலா, மும்பையில் பிறந்த தமிழர். சிறு வயதிலேயே குடும்பம் அமெரிக்காவுக்கு இடம் பெயர அங்கு படித்தார் பாலா. அமெரிக்காவின் ஏபிசி சேனலில் காமெடி தொடரில் நடிக்கத் தொடங்கிய பாலாவுக்கு அங்கிருந்து, டாப் கியரில் தொடங்கியது அவரது கேரியர். 
கேப் டிரைவர், அமெரிக்கன் பிளண்ட், ஸ்டார் ஸ்ட்ரக், ஹாலோஸ் குரோவ், மீட் த படேஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ள பாலா, அதிக புகழ்பெற்றது, ’தி வாக்கிங் டெட்’ என்ற டிவி தொடரில். இதில் அவரது கேலப் சுப்ரமணியம் என்ற கேரக்டர் அமெரிக்காவில் அமோக பிரபலம்.

மனோஜ் நைட் ஷியாமளன் :


புதுச்சேரியின் மாஹேவில் பிறந்தவர். பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அமெரிக்கா சென்றுவிட்டது குடும்பம். சின்ன வயதிலேயே சினிமா ஆசை. இவர் இயக்கிய 'சிக்ஸ்த் சென்ஸ்' படம், ஆறு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவரது, சைன்ஸ், அன்பிரேக்கபிள், த வில்லேஜ், ஆஃபர் எர்த், த விசிட் ஆகிய படங்கள் கவனிக்கப்பட்டன. இப்போது கிளாஸ் என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.

அசோக் அமிர்தராஜ்:


அறிமுகம் தேவையில்லை இவருக்கு. சென்னையில் பிறந்த இந்த முன்னள் டென்னிஸ் வீரர், இந்தியா சார்பாக அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். நைட் ஐஸ், டபுள் இம்பாக்ட், இன்ஃபெர்னோ, ஸ்ட்ரீட் ஃபைட்டர், அசைலம், டெத் சண்டன்ஸ், 99 ஹோம்ஸ், லைஃப் ஆப் கிரைம் உட்பட சுமார் நூற்றுக்கும் அதிமான படங்களை தயாரித்திருக்கிறார் இவர். ரஜினிகாந்த் நடித்த ‘பிளட்ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்தை தயாரித்தவரும் இவர்தான். அசோக் அமிர்தராஜ் சென்னைக்காரராக இருந்தாலும் அவர் தயாரித்த ஒரே தமிழ்ப் படம், ’ஜீன்ஸ்’.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மனைவி சித்ரா, மகள் பிரியா, மகன் மிலன் ஆகியோருடன் வசித்து வருகிறார் இந்த கோடீஸ்வர தயாரிப்பாளர். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்