Published : 13,Jun 2017 02:28 AM

இலங்கை ஃபீல்டிங் சொதப்பல்: அரையிறுதியில் பாகிஸ்தான்!

srilanka-pakistan-champion-trophy

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்துவருகிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கையும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிக்வெல்லா, குணதிலகா களம் இறங்கினார்கள். ஸ்கோர் 26 ரன்னாக இருந்தபோது குணதிலகா 13 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மெண்டிஸ் 27 ரன்னிலும், சண்டிமால் ரன் அவுட்டிலும் வெளியேற இலங்கை 83 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அடுத்து மேத்யூஸ், டிக்வெல்லாவுடன் இணைந்தார். ஸ்கோர் 161 ரன்னாக உயர்ந்த போது மேத்யூஸ் 39 ரன்னில் போல்டு ஆனார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. நிலைத்து நின்ற டிக்வெல்லா 86 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, இலங்கை தடுமாறியது. அந்த அணி 49.2 ஓவர்களில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஜூனைட் கான், ஹசன் அலி தலா 3 விக்கெட்டும், முகமது அமிர், அஷ்ரப் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது 61 ரன்களும் பஹார் ஜமான் 50 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் பிரதீப் 3 விக்கெட்டும், மலிங்கா, லக்மல், பெரேரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். சர்ப்ராஸ் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்.
 
இலங்கை அணியின் மோசமான ஃபீல்டிங்கால் அடுத்தடுத்து இரண்டு கேட்ச் வாய்ப்புகளிலிருந்து சர்பராஸ் அகமது தப்பினார். அவர் அவுட்டாகி இருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கலாம்.

இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இலங்கை அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
 நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் பாகிஸ்தான், இங்கிலாந்தை சந்திக்கிறது. நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்