Published : 04,Apr 2020 12:14 PM
அந்த 9 நிமிடங்கள் தெரு விளக்குகளை அணைத்துவிடாதீர்கள்..! - மத்திய அரசு அறிவுறுத்தல்

நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தெரு விளக்குகளை அணைத்துவிட வேண்டாம் என மத்திய மின்சக்தித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டம் தற்போது தான் ஆரம்பித்திருக்கிறது எனப் பிரதமர் மோடி மக்களுக்கு தெரிவித்திருந்தார். அத்துடன் கொரோனா எதிர்ப்புக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அவர் அவ்வப்போது சில கோரிக்கைகளை மக்களுக்கு விடுத்து வருகிறார். முதலில் மார்ச் 22ஆம் தேதி அனைவரும் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அடுத்ததாக மாலை 5 மணிக்கு அனைவரும் கைகளைத் தட்டி மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த வரிசையில் நாளை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் 9 நிமிடங்கள் விளக்குகளை அடித்துவிட்டு டார்ச் விளக்குகள் அல்லது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதொடர்பாக தமிழக மின்வாரியம் இன்று மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, மக்கள் வீட்டின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என்றும், மின்சாதனப் பொருட்களை அணைக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு செய்தால் மின்சார கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய மின்சக்தி வாரியம் புதிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தெரு விளக்குகளையோ, வீட்டின் மின்சாதனப் பொருட்களையோ அணைத்து வைக்கும்படி எதுவும் கூறப்படவில்லை. வீட்டின் விளக்குகளை மட்டுமே அணைக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவமனைகளில் விளக்குகளை அணைக்கக் கூடாது. மக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உள்ளூர் வாசிகள் தெரு விளக்குகளை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.