Published : 02,Apr 2020 11:57 AM
மருந்துப் பொருட்களின் உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மருந்துப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருந்துப் பொருட்களின் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100 சதவிதம் முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் மூலதனக் கடனிற்கான வட்டியில் 6 சதவிதம் மானியமாக வழங்கப்படும். 20 கோடியை உச்சவரம்பாகக் கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாக பிரித்து வழங்கப்படும்.
#BREAKING மருந்துகள் உற்பத்திக்கு சலுகைகள் அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி https://t.co/K2Ua3Wb2WN
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 2, 2020
சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இந்தச் சலுகைகள் பொருந்தும். மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் அனுமதிக்கு காத்திருக்காமல் உடனே உற்பத்தியை துவக்கலாம். ஏற்கனவே உள்ள நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் ஜூலை 31க்குள் உற்பத்தி செய்யத்துவங்கினால் சலுகை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.