[X] Close

குழந்தைகள் மனதில் கனவுகளை நிரப்பிய ஒப்பற்ற கதை சொல்லி “ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்”...!

உலகம்,சிறப்புச் செய்திகள்

Children-s-story-teller--Hans-Christian-Andersen-

கதை கேட்டு வளராத குழந்தைகள் நம்மூரில் ரொம்பவே குறைவு., குழந்தைகளின் உலகில் நுழைவது கிட்டத்தட்ட ஒருவழிப் பாதை தான். அதிலிருந்து வெளியேற யாரும் விரும்புவதில்லை. வரலாற்றில் பலர் குழந்தைகளுக்கான படைப்புகளை உருவாக்குவதில் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்து இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன். குழந்தைகளுக்காக நூற்றுக்கணக்கான கதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் 1805 ஆம் ஆண்டு இதே நாளில் டென்மார்க்கில் பிறந்தார். அவர் நினைவாக சர்வதேச சிறுவர் புத்தக தினம் இன்று கொண்டாடப்படுகிறது.


Advertisement

image

நூற்றுக்கணக்கான கதைகளை குழந்தைகளுக்காக படைத்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் குழந்தைப் பருவம் அத்தனை இதமாக அமையவில்லை. கடும் உழைப்பாளியான அவரது தந்தை ஆண்டர்சனுக்கு கதை சொல்வதை தன் தினசரி கடமையாகவே செய்து வந்திருக்கிறார். அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த ஆண்டர்சனுக்கு 9 வயது ஆகும் போது அவரது தந்தை காலமானார். அதனால் தனது பள்ளிப்படிப்பை கைவிட்டுவிட்டு அந்த சிறுவயதிலேயே வேலைக்கு போனார் ஆண்டர்சன். அந்தக் காலத்தில் கல்வி இலவசம் தான் என்றாலும் வறுமை அவரை வேலைக்குப் போகவே நிர்பந்தித்தது. உண்மையில் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் தான் ஒரு பாடகராக வேண்டும் என கனவு கண்டார். ஆனால் விதிவழியே அவரது வாழ்க்கை நகர்ந்தது. ஆடை தயாரிப்பாளர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த அவர் பிறகு தன் பதின் பருவ முடிவில் வீட்டை விட்டு வெளியேறினார்.


Advertisement

image

பாடகராகும் கனவு தூரத்தியது. தெருக்களில் பாட்டுப் பாடி நடனமாடி பலரது கவனத்தை பெற முயன்றார். அது அவ்வூர் மன்னரின் கவனத்திற்குப் போகவே மன்னரின் உதவியால் கல்வி கற்றார். கூடவே கதைகளை எழுத முயன்ற அவருக்கு அது வசப்பட்டது. “நீ குழந்தைகளுக்கான கதை சொல்லி” என அவரது காதில் அழுத்தமாகச் சொன்னது காலம். ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் 1828இல் “எ எனர்ஜி ஆன் ஃபூட்” என்ற கதையை எழுதினார். அவரது படைப்புகளில் முக்கியமான கதையாக இதனைச் சொல்லலாம். “The ugly duckling, The Little Mermaid, The Nightingale, The Snow Queen...” என இவரது பல படைப்புகள் நூற்றுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இவரது பல கதைகள் நாடகங்களாகவும், ஓவியங்களாகவும், சினிமாவாகவும் வெவ்வெறு கலைவடிவை பெற்றன.  1847 ஆம் ஆண்டு 'The Fairy tale of my life' என்ற பெயரில் இவர் தனது சுயசரிதையை எழுதினார். இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் வாழ்க்கையை தொலைக்காட்சிப் படமாக இயக்கினார் லண்டனைச் சேர்ந்த ப்ளிப் சாவ்லி. இப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது.

image


Advertisement

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் பல கதைகள் தமிழிலும் கிடைக்கிறது. அதில் குட்டி கடற்கன்னி என்ற கதை முக்கியமானது. கடற்கன்னி என்றாலே பருவப்பெண் உருவம் ஒன்றே நம்மனதில் தோன்றும். ஆனால் இக்கதை குழந்தை கடற்கன்னியொருத்தியின் கனவுகளை பேசிய அற்புத படைப்பு. ஒரே ஒரு குழந்தையை குஷிபடுத்தவே நாம் படாதபாடு பட வேண்டியிருக்கும். ஆனால் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் தன் படைப்புகளின் வழியே ஆயிரமாயிரம் குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, கனவுகளை, கற்பனைகளை நிரப்பியவர். அவர் 1875 ஆம் ஆண்டு தனது 70 வது வயதில் காலமானார். ஹான்ஸ் கிறிஸ்டியனின் நினைவாக கொண்டாடப்படும் சிறுவர் புத்தக தினமான இன்று அவர் எழுதிய புத்தகமொன்றை நம் வீட்டு குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து மகிழ்விப்போம்.


Advertisement

Advertisement
[X] Close