
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்த அவர், மாணவர்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்தார். மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய ஸ்டாலின், தை மாதம் முடிவதற்குள்ளாகவாவது அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 21 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்திய மாணவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி சென்னை மெரினா உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.