ஒரு கொரோனா நோயாளி மூலம் 23 பேருக்கு பரவிய வைரஸ்? - பஞ்சாபில் 15 கிராமங்களுக்கு சீல்

ஒரு கொரோனா நோயாளி மூலம் 23 பேருக்கு பரவிய வைரஸ்? - பஞ்சாபில் 15 கிராமங்களுக்கு சீல்
ஒரு கொரோனா நோயாளி மூலம் 23 பேருக்கு பரவிய வைரஸ்? - பஞ்சாபில் 15 கிராமங்களுக்கு சீல்

கொரோனா நோய் பாதித்த ஒருவர் அந்நோயை 23 பேருக்கு தொற்ற வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கொரோனா நோயினால் தாக்கப்பட்டு கடந்த மார்ச் 18 அன்று ஒருவர் இறந்தார். இதுவரை இந்த மாநிலத்தின் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த நோயாளிகளில் குறைந்தது 23 பேருக்கு கடந்த 18 தேதி அன்று இறந்து போனவரிடமிருந்துதான் இந்தத் தொற்று பரவி இருப்பதாக அம்மாநில அதிகாரிகள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா நோயினால் தாக்கப்பட்டு இறந்து போனவருக்கு 70 வயது என கூறப்படுகிறது. குருத்துவாராவில் மதபோதகராக இருந்த இவர், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இரண்டு வார சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பயணத்தை முடித்துவிட்டு கடந்த மார்ச் 6 ஆம் தேதி டெல்லிக்கு வந்த இவர், பின்னர் அங்கிருந்து பஞ்சாபிற்கு சென்றுள்ளார்.

இவருடன் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களும் வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ளனர். இவர் ஊருக்கு வந்தபின்பு நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் இவர், சுய தனிமைப்படுத்தலை மீறி சுகந்திரமாக வெளி இடங்களில் திரிந்துள்ளார் எனத் தெரிகிறது.

மார்ச் 8 முதல் 10 ஆம் தேதிக்குள் அனந்த்பூர் சாஹிப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனையடுத்து இவர் ஷாஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். நோய் தொற்று இருந்தும் இவர் இவ்வாறு நடமாடியதாக அவரது நடமாட்டத்தை கண்காணித்த அதிகாரிகளுக்கு இப்போது தெரிந்துள்ளது.

கொரோனா வைரஸ் இவரைத் தாக்கியுள்ளதா எனக் கண்டறிவதற்கு முன்பாகவே இவர் குறைந்தது 100 பேருடன் நெருங்கி பழகியுள்ளார். மேலும் இவரும் இவருடன் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இரண்டு பயண நண்பர்களும் மாநிலம் முழுவதும் உள்ள 15 கிராமங்களுக்கு சென்று வந்துள்ளதாக இப்போது கண்டறியப்படுள்ளது.

இந்நிலையில் அவரது குடும்பத்தில், 14 பேருக்கு கொரோனா பாசிடிவ் சோதனை செய்யப்பட்டுள்ளது. இவரது பேத்தி மற்றும் பேரன் ஆகிய இருவரும் ஏராளமான அந்த ஊர் மக்களுடன் மிக நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த மூன்று பேரின் பொறுப்பற்ற செயல் காரணமாக கொரோனா தொற்று பல வழிகளில் பரவி இருக்கலாம் என சந்தேகித்து ஒவ்வொரு கிராமமாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இவர்களின் புழக்கம் இருந்த 15 கிராமங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். நவன்ஷஹர், மொஹாலி, அமிர்தசரஸ், ஹோஷியார்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய ஊர்களில் இந்த மூவரும் சேர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதுவரை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 700 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் 17 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com