“சாதாரணமா நினைக்காதீங்க” - ஐசியு-லிருந்து கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ

“சாதாரணமா நினைக்காதீங்க” - ஐசியு-லிருந்து கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ
“சாதாரணமா நினைக்காதீங்க” - ஐசியு-லிருந்து கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவி இவர் என்று கூறி பலரும் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய கனடா பிரதமர், தனது மனைவியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்திருந்தார். ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழந்தைகளும் லண்டனிலிருந்து திரும்பிய பின்னர், மார்ச் 12 அன்று இவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின் இவரது குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலிருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவியின் வீடியோ பதிவு எனக்கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மொத்தம் இரண்டு நிமிடங்கள் நீளும் இந்த வீடியோவில் உள்ள அந்தப் பெண் ஐ.சி.யு பிரிவில் படுத்தப்படுகையாக உள்ளார். அவர் தனது மருத்துவ நிலைமையை விவரித்து வீடியோவில் பேசுகிறார். அவர் பேசத் தொடங்கும்போதே கடுமையாக இருமல் செய்கிறார். அவரால் பேசவே முடியவில்லை. ஆகவே அவர் கொரோனா வைரஸ் குறித்து மக்களை எச்சரிக்கிறார்.

மேலும் வீடியோவில் காணப்படும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தன்னால் சுவாசிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார். இவர் ஒரு கொரோனா வைரஸ் பாதித்த நோயாளி எனத் தெரிகிறது. ஆனால் இவர் கனடா நாட்டு பிரதமரின் மனைவிதானா என்பதில் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் ‘இந்தியா டுடே’ இதன் உண்மைத்தன்மை குறித்து சோதனையை மேற்கொண்டது. அதில் வீடியோ பொய்யானது என்று கண்டறியப்பட்டுள்ளது. வீடியோவிலுள்ள பெண் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி அல்ல என்றும் இவர் லண்டனைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளி என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளாமலே பலரும் இந்த வீடியோ காட்டுத்தீ போல சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆகவே அது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு ‘கனடா பிரதமரின் மனைவி’ என்றும் ‘இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு’ என்றும் கூறி பரப்பி வருகின்றனர்.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 39 வயதான இவரது பெயர்; தாரா ஜேன் லாங்ஸ்டன். "டெய்லி மெயில்" இதனை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் தாரா தனது மொபைலை வைத்து இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதுதான் தவறான அடையாளத்துடன் இப்போது வைரலாகியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com