
கொரோனா வைரஸ் எந்த நாட்டாலும் உருவாக்கப்பட்டதல்ல, தானாக உருவானது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் வுஹான் நகரில் கிருமி யுத்தம் நடத்துவதற்கான ஓர் ஆய்வகத்தைச் சீனா வைத்திருந்தது; அங்கிருந்து தப்பி வந்தது இன்று உலகை ஆக்கிரமித்திருப்பதுதான் கொரோனா. இப்படியொரு செய்தி கொரோனாவை விட மிக வேகமாகப் பரவியது. ஆனால் அண்மையில் வெளிவந்திருக்கும் ஓர் ஆய்வு முடிவு கொரோனா வைரஸானது, சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ தயாரித்து விட்டதல்ல; இயற்கையாக உருவானது என்று உறுதி செய்திருக்கிறது. கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான ஓர் ஆய்வாளர் குழு, இந்த ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறது. மனிதன் எப்படி இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியடைந்தானோ அதுபோல கொரோனா வைரஸும் செயற்கைத் தூண்டல் ஏதுமின்றி உருவானதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டே வாரத்தில், இதன் மரபணுக் கட்டமைப்பைக் கண்டுபிடித்த சீனா, அதை பொதுவில் வெளியிட்டது. எனினும் அது எப்படி உருவானது என்பது புதிராகவே இருந்து வந்தது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ்-COV வைரஸ் தற்போதைய கொரோனா வைரஸை விட வீரியமானது. ஏற்கெனவே வீரியமான வைரஸ் இருக்கையில், அதைவிடக் குறைந்த வலிமை கொண்ட வைரஸை ஏன் செயற்கையாக உருவாக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகிறார்கள். அதேபோல தற்போதைய கொரோனா வைரஸின் தன்மையானது இதற்கு முன்பு மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ்களின் அமைப்பைப் போல் இல்லாமல், வவ்வால்களுக்கு நலக்குறைவை ஏற்படுத்திய வைரஸ்களைப் போல் இருக்கிறது. இது போன்ற காரணங்களால் தற்போதைய கொரோனா வைரஸ், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று ஆன்டர்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
கொரோனா பரவத் தொடங்கிய வுஹானில்தான் வைரஸ் ஆராய்ச்சி மையம் ஒன்று இருக்கிறது. அதனால்தான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா வெளியேறிப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக வதந்தி பரவத் தொடங்கியது. இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறது ஆண்டர்சன் தலைமையிலான ஆய்வுக்குழு. வைரஸின் மரபணு கட்டமைப்பு மூலம் அது, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறது அக்குழு.
வைரஸ் என்பது மிகச் சிறு உயிரி. அது தன்னைத்தானே பல்கிக் பெருக்கிக் கொள்ள முடியாது. வாழ்வதற்கும், இனத்தைப் பெருக்குவதற்கும் அது இன்னொரு உயிரினத்தை நம்பியிருக்க வேண்டும். வீட்டில் வாழும் பூனையும், காட்டில் வாழும் புலியும் ஒரே உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது போல, வைரஸ்களுக்கும் பிரிவுகளும் குடும்ப வகையும் உண்டு. ஒரே குடும்பத்தில் பூனையைப் போலச் சாதுவும் புலியைப் போல மூர்க்கமானதும் இருக்கலாம். CoV என அறிவியலாளர்கள் அழைக்கும் கொரோனா வைரஸ் குடும்பமும் அப்படிப்பட்டதுதான். ஏற்கெனவே மனிதர்களைத் தாக்கிய மெர்ஸ், சார்ஸ் போன்றவை இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை. மெர்ஸ்-CoV, சார்ஸ்-CoV என அவை அழைக்கப்படுகின்றன. இப்போது நாம் கொரோனா என்றும் நோவல் கொரோனா என்றும் அழைக்கும் வைரஸின் அறிவியல் பெயர் சார்ஸ் CoV-2 என்பதாகும். சூரியனினில் இருக்கும் கொரோனாவைப் போன்று இருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.