[X] Close

கொடூர பாதிப்புதான்; ஆனாலும் சில நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்த கொரோனா!!

சிறப்புச் செய்திகள்,கொரோனா வைரஸ்

Corona-brings-family-closer-families-are-spending-quality-time

கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. மக்களால் நிரம்பி இருந்த பொது இடங்கள், சுற்றுலா தலங்கள், என பல இடங்களும் காலி இடங்களாகி இருக்கின்றன. பரபரப்பாக காணப்பட்ட சாலைகள் இன்று வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் எல்லாம் கொரோனாவால் வீட்டுக்குள் முடக்கி இருக்கின்றனர்.

image

இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.‌ கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் பொது இடங்களில் கூட வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் என மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது கொரோனா எளிதாக தொற்றிவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. முடிந்தவரை வெளிப்பயணங்களை தவிர்த்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

image

கொரோனா என்ற வைரஸ் இன்று கொத்துகொத்தாக உயிரை பறித்துக் கொண்டு இருக்கிறது. பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விளையாட்டு உலகம் முடங்கிக் கிடக்கிறது. இப்படி கொரோனாவால் நாம் சந்திக்கும் இழப்பு நிறைய என்றாலும் கொரோனா நமக்கு கற்றுக்கொடுக்கும் சில விஷயங்களும் உண்டு.

அந்தக்காலத்தில் வெளியில் இருந்து வீட்டுக்குள் வருபவர்கள் வாசலிலேயே கைகால்களை சுத்தமாக கழுவிவிட்டு வீட்டுக்குள் வருவார்கள், அதற்கெனவே வாசலில் நீரும் பாத்திரமும் இருக்கும். இது காலப்போக்கில் மாறிவிட்டது. வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்ததும் சோபாவில் உட்கார்ந்து ஓய்வு எடுத்த பிறகே பலரும் உடையை மாற்றி ஃபிரஷ் ஆவார்கள். ஆனால் இன்று கதை அப்படி அல்ல, நேராக சென்று கைகால்களை தேய்த்து கழுவிய பிறகே அமர்கிறார்கள்.

image

 

இதுதான் ஆரோக்யத்திற்கான வழிமுறை என்கிறார்கள் மருத்துவர்கள். இது கொரோனா காலத்திற்கு மட்டுமல்ல. இந்த பழக்கத்தை காலகாலத்துக்கும் கடைபிடிக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவிப்பாக உள்ளது. அதேபோல உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், சத்தான உணவுகளை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் போன்ற பல நல்ல விஷயங்களை நமக்கு இந்த கொரோனா நினைவுப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த கொரோனாவால் பலர் இன்று குடும்பத்துடன் நேரம் செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை. பெற்றோர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை. இதனால் அவர்களால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை ஒதுக்க முடிகிறது. பொதுவாக வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையில் இருப்பார்கள். அன்றைய தினமும் வீட்டு வேலையில் பிசியாக இருப்பார்கள். அப்படி இல்லை என்றாலும், சினிமா, மால் என வெளியே எங்கேயாவது செல்வார்கள். ஆனால் இன்று வெளி உலகம் பூட்டப்பட்டு விட்டது. அதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து பிடித்த உணவுகளை சமைப்பது, ஓவியம், தையல் போன்ற பிடித்த வேலைகளை செய்வது என இறங்கியுள்ளனர் வீட்டுப்பெண்கள். குறிப்பாக பல நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் அமர்ந்து உணவு உண்பதே தற்போதுதான் என்கின்றனர் சிலர்.

image

இது குறித்து தெரிவித்துள்ள குடும்ப தலைவி ஒருவர், இணையத்தில் தேடி தேடி புதிது புதிதாக சமைக்கிறோம். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். சாலைகள் காலியாக இருக்கின்றன. பகல் நேரங்களில் கூட்டம் இல்லாதபோது வெளியே சென்று தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வருகிறோம். இது புது அனுபவமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்றே உடற்பயிற்சி செய்த பலரும் இன்று வீட்டுக்குள் உடற்பயிற்சி செய்கிறார்கள். யோகா செய்கிறார்கள். முன்பெல்லாம் தேவை இல்லாமலேயே வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் பலரும் இன்று தாம் உண்டு வீடு உண்டு என்று இருக்கிறார்கள். இப்படி நமக்கான நேரத்தை நமக்கே நினைவுப்படுத்தி இருக்கிறது கொரோனா.

image

வீட்டுக்குள் இருங்கள் என்பதே சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல். ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனாவை மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் துரத்தி அடிக்கலாம். முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் நம்மோடு பயணிக்கத் தொடங்கும்பட்சத்தில் வெகு விரைவில் இந்த கொரோனா என்ற வார்த்தை நம்மை விட்டு விலகிவிடும். நாளை மீண்டும் இந்த உலகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிடும். ஆனால் கொரோனாவால் நாம் கற்றுக்கொண்ட சில விஷயங்களை என்றுமே மறந்துவிடக்கூடாது.

கொரோனா முன்னெச்சரிக்கை : டீக்கடைகள், உணவகங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close