“இடவசதி இல்லாததால் ஜாதகம் பார்ப்பவரின் வீட்டில் வங்கி லாக்கர்” அச்சத்தில் வாடிக்கையாளர்கள்

“இடவசதி இல்லாததால் ஜாதகம் பார்ப்பவரின் வீட்டில் வங்கி லாக்கர்” அச்சத்தில் வாடிக்கையாளர்கள்
“இடவசதி இல்லாததால் ஜாதகம் பார்ப்பவரின் வீட்டில் வங்கி லாக்கர்” அச்சத்தில் வாடிக்கையாளர்கள்

ராமநாதபுரத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்றின் லாக்கர் ஜாதகம் பார்க்கும் நபரின் வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் கே.பாப்பாங்குளம், செம்மனேந்தல், சீமனேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அத்துடன் குறைந்த வட்டியில் நகைகடன், பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை பெற்றுள்ள விவசாயிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகளை அடகு வைத்துள்ளனர்.

இவ்வாறாக, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆவணங்கள் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக லாக்கர் வசதி வங்கியில் உள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் போதிய இடவசதியின்றி வங்கியின் லாக்கர் தனிநபர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஜாதகம் பார்க்கும் தொழில் செய்யும் அந்த தனிநபரின் வீட்டிற்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வருகை தருவதாக கூறப்படுகிறது.

இதனால் வங்கி லாக்கர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வங்கி லாக்கரை எலி அல்லது பூனைகள் தொடுவதால், அடிக்கடி அலாறம் அடித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொந்தரவு அளிப்பதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கட்டட வசதிகள் இல்லாததால் தற்போது வங்கி இ-சேவை மையத்தில் எந்தொரு அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வருவதாகவும் வாடிக்கையாளர்கள் குறைகூறுகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுர கூட்டுறவு சார் பதிவாளர் கிருஷ்ணராவ்வை தொடர்பு கொண்டு கேட்டப் போது, புகாராக கிராம மக்கள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com