Published : 10,Jun 2017 10:19 AM
நெஞ்சில் பாய்ந்தது 2 புல்லட்: 1 மாதத்தில்’பார்’ திரும்பினார் இளைஞர்

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய இளைஞர், ஒரே மாதத்தில் வேலைக்கு திரும்பினார்.
மும்பை நல்லசோபரா பகுதியில் உள்ள கேலக்ஸி பாரில் காசாளராக வேலை பார்த்தவர் திலிப் வர்மா. வயது 27. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் பாருக்கு வந்த இரண்டு பேர், பிரபல தாதா சுரேஷ் புஜாரியின் ஆட்கள் என்று கூறிவிட்டு வர்மாவிடம் தகராறு செய்தனர். பின்னர் வர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் வர்மா நெஞ்சில், இரண்டு குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
’ கொஞ்சம் லேட்டாக வந்திருந்தாலும் உயிருக்கு சிக்கலாகி இருக்கும். ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டது. ஒரு புல்லட் அவர் நுரையீரலை பாதித்துவிட்டது. ரத்தக் குழாய் சிதைந்ததால் உடனடியாக ஆபரேஷன் செய்து அதை சரி செய்தோம். பிறகு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வர்மா, பொதுவார்டுக்கு மாற்றப்பட்டார். மூன்று வாரங்கள் வீட்டில் ஓய்வெடுத்தவர் இப்போது நலமாகிவிட்டார்’ என்றார், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கார்க்.
இப்போது பழையபடி ’பார்’-க்கு வேலைக்கு திரும்பிவிட்டார் வர்மா. நெஞ்சில் இரண்டு குண்டுகள் பாய்ந்தும் ஒரே மாதத்தில் அவர் வேலைக்குத் திரும்பியதை மருத்துவர்கள் பெருமையாகக் கூறுகின்றனர்.