ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதுகிறதா ‘கேஜிஎஃப்2’?

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதுகிறதா ‘கேஜிஎஃப்2’?
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதுகிறதா ‘கேஜிஎஃப்2’?

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதும் சூழல் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இயக்குநர் சிவா, தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இடையில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. சிறுத்தை சிவா ஏற்கெனவே அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கி இருந்தார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து அஜித்தை வைத்து இவர் படங்களை இயக்கி வந்ததால் கோலிவுட் உலகில் முக்கியமான இயக்குநர் என்ற நிலையை எட்டிப் பிடித்தார்.

தமிழ் சினிமாவின் பெரிய நடிகராக வலம் வரும் அஜித்தை அடுத்து, இவர் ரஜினியை வைத்து படத்தை இயக்கி வருவதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனா, குஷ்பு ஆகிய இரண்டு நடிகைகளும் ரஜினியுடன் இணைந்துள்ளனர். மேலும், இளம் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ‘அண்ணாத்த’ இந்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதே மாதம் இன்னொரு பெரிய படமும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த 2018 ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது ‘கேஜிஎஃப் அத்தியாயம் 1’. அதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் யஷ் நாயகனாக நடித்திருந்தார். பல மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. பாலிவுட்டில் பெரிய வசூலை ஈட்டியது.

இதனிடையேதான், அக்டோபர் 23 ஆம் தேதி ‘கேஜிஎஃப்: அத்தியாயம்2’ வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் போன்றவர்களும் இணைந்திருப்பதால் இதன் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் விநியோகிஸ்தராக இருந்து விஷால் தயாரிப்பு நிறுவனம் தமிழில் படத்தை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி படம் வெளியாகும் பட்சத்தில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் மோத வேண்டிய சூழல் உருவாகும். அது இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பாதிக்கலாம். ஆகவே ரஜினியின் படம் வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் கசிகின்றன. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com