Published : 09,Jun 2017 02:55 PM
அண்ணன் வைகோ - ஸ்டாலின் உருக்கம்

மலேசியாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகோவின் பெயரைக் குறிப்பிட்ட எல்லா இடங்களிலும் அண்ணன் வைகோ என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் வைகோவின் கைது பற்றி மத்திய அரசு உடனே தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து வைகோ கைதுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரைக் கௌரவமாக நடத்திட தக்க நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் ராமசாமியின் மகள் திருமணத்துக்கு சென்ற வைகோவை, ஆபத்தானவர் என்று கூறி மலேசிய அரசு கைது செய்து, தனி அறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் மட்டுமின்றி அராஜக நடவடிக்கை என்றும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவுக்கு ஆதரவாக ஸ்டாலின் குரல் எழுப்பியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.