ஆஸ்மாவைப் போக்க உயிர் மீனை விழுங்கினர்

ஆஸ்மாவைப் போக்க உயிர் மீனை விழுங்கினர்
ஆஸ்மாவைப் போக்க உயிர் மீனை விழுங்கினர்

ஆஸ்துமா நோயை முழுவதுமாக குணப்படுத்தக்கூடிய மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஹைதராபாத்தில் பரம்பரை பரம்பரையாக ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து கொடுத்து வருகின்றனர் பதினி குடும்பத்தினர். இந்த மீன் மருந்தால் ஆஸ்துமா நோய் முழுவதும் குணமடைவதாக, அங்கு வந்து மீன் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கூறுகின்றனர். இந்த மீன் மருந்து முகாமில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் மருந்தை சாப்பிடுவார்கள்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரை விழுங்க வைக்கும் முகாம் ஹைத்ராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான மீன் மருந்து முகாம் ஹைதராபாத் கண்காட்சி மையத்தில் தொடங்கியது. மீன் மருந்து வாங்குவதற்காக 32 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.  லட்சக்கணக்கானோர் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்த முகாமில் பங்கேற்றனர். மூலிகை மருந்தை மீனின் வாயில் வைத்து, நோயாளியின் வாயில் திணிக்கிறார்கள். மூலிகையுடன் உள்ள மீனை நோயாளிகள் அப்படியே விழுங்க வேண்டும். நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு மீன் மருந்து வழங்கப்பட்டது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெல்லத்தில் வைத்து ஆஸ்துமா மருந்து வழங்கப்பட்டது. இன்று காலை 2 ஆவது நாளாக மீன் மருத்துவ முகாம் தொடங்கியது. இன்று மாலையுடன் மீன் மருந்து முகாம் முடிவடைந்தது. இன்றும் லட்சக்கணக்கான மக்கள் மீன் மருந்தை உட்கொண்டனர்.

கண்காட்சிக்கு வரும் அனைவருக்குமே மீன் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, மராட்டியம், ஒடிசா மாநிலங்களில் இருந்தும் ஆஸ்துமா நோயாளிகள் மீன் மருந்து முகாமுக்கு வந்து மீனை விழுங்கினர். ஒரு முறை மீன் மருந்து சாப்பிட்டாலே ஆஸ்துமா குணமாகிவிடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த முகாமுக்காக லட்சக்கணக்கான மீன்களை தெலங்கானா அரசின் மீன் வளத்துறை இலவசமாக வழங்கியது. அதே போல் அரசு துறைகள் சார்பில் குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி, பஸ் வசதி போன்றவையும் செய்யப்பட்டிருந்தன.

இந்த மருத்துவ முகாமை நடத்தும் பதினி சகோதரர்கள் கூறுகையில், ஆண்டாண்டு காலமாக மீன் மருத்துவ சிகிச்சையை, சேவை மனப்பான்மையுடன் இலவசமாக அளித்து வருகிறோம். எங்கள் பரம்பரையை சேர்ந்த முன்னோர்கள் நிஜாம் காலத்தில் இருந்தே இந்த மீன் மருந்து சிகிச்சையை அளித்து வருகிறார்கள். அந்த சேவை இப்போதுவரை தொடருகிறது. மீன் மருந்து சாப்பிட்டவர்களுக்கு ஆஸ்துமா குணமாகும். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது தீரும். ஒரு முறை சாப்பிட்டால் திரும்ப நோய் வராது என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com