“அஜித் குமாருக்கு சமூக ஊடகத்தில் கணக்கு இல்லை” - வழக்கறிஞர் நோட்டீஸ்

“அஜித் குமாருக்கு சமூக ஊடகத்தில் கணக்கு இல்லை” - வழக்கறிஞர் நோட்டீஸ்
“அஜித் குமாருக்கு சமூக ஊடகத்தில் கணக்கு இல்லை” - வழக்கறிஞர் நோட்டீஸ்


நடிகர் அஜித் குமார் சார்பாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாக ஒரு நோட்டீசை வெளியிட்டுள்ளார்.


சமூக ஊடகங்களில் அஜித் நேரடியாக இல்லை. ஆனால் அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் செய்தி வராத நாளே இல்லை. அந்தளவுக்கு அவரது ரசிகர்கள் அவரை தினமும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அவரை சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் இணையுமாறு ட்விட்டர் அதிகாரியே ஒருமுறை அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதற்கு அஜித் எந்தப் பதிலும் கூறவில்லை.

இந்நிலையில் நேற்று அஜித் குமார் பெயரில் ஒரு போலியான அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் அஜித் கூறுவதைப் போல சில விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அது அதிகாரப்பூர்வமானதல்ல என்பது இப்போது தெரியவந்துள்ளது. அஜித் குமாரின் வழக்கறிஞர் எம்.எஸ். பரத் ஒரு நோட்டீசை வெளியிட்டுள்ளார். அதில் சில விசயங்களுக்கு சட்ட ரீதியாக மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் அந்தக் கடிதத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “நடிகர் அஜித் குமார் அவர்களின் சட்ட ஆலோசகர்கள் நாங்கள். இனிமேல் அவர் எங்கள் கட்சிக்காரராகக் கருதப்படுகிறார். மேலும் இந்த நோட்டீஸ் அவரது அறிவுறுத்தலின் பேரிலும் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம்.

மார்ச் 6, 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களின் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தையும் இணைத்திருப்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கிறது.

அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்த கருத்துகள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்.

அஜித்குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளும் இல்லை என்றும், சமூக ஊடகங்களில் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் கீழ்க்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.

1, அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.
2, அவர் எந்தச் சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.
3, சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை.
4, மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக்கூறி வந்த இந்தப் போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.

இறுதியாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடித்தற்குத் தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com