
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநிலத்தில் நடைபெற இருந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்டிமெண்ட் காட்சிகளுடன் குடும்பங்களுக்கான திரைப்படங்களை கொடுக்கும் சிவா, அதே பாணியில் இந்தத் திரைப்படத்தை இயக்கி வருவதாக தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்டிமெண்ட், குடும்பக்கதை என கமர்சியல் படம் என்பதால் நடிகர் ரஜினிகாந்தும் உற்சாகத்துடன் நடித்து வருகிறார்.
தற்போது ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், மார்ச் தொடக்கத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புனே - கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. புனே-கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இடங்கள் குறித்து படக்குழு இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் தகவல் வெளியாகி இருந்து.
இந்நிலையில் கொரோனோ வைரஸ் அச்சத்தால், ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவல்களின்படி, ‘அண்ணாத்த'வின் இரண்டு கட்ட படப்பிடிக்கள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. அடுத்ததாக கொல்கத்தா மற்றும் புனேவில் படப்பிடிப்பு நடத்த குழு திட்டமிட்டிருந்த நிலையில், உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வட மாநிலங்களில் படப்பிடிப்பு செய்வதற்கான திட்டங்களை படக்குழு கைவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆகவேதான் இந்த இடைவெளியை பயன்படுத்தி ரஜினி, தன் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக படக்குழுவை சார்ந்த ஒருவர் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஊடகத்திற்கு ‘இப்போது, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடர முடிவு செய்துள்ளோம். அடுத்த இரண்டு மாதங்களில் அதை முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.