இன்று மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி

இன்று மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி
இன்று மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி

அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சென்னையில் இன்று சந்திக்கிறார். இதுகுறித்து நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி தொடங்கும் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கிவிட்டதாக, ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரசியல் கட்சி தொடங்கி, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என கடந்த 2017-ம் ஆண்டில் அறிவித்த ரஜினிகாந்த், சூட்டோடு சூடாக ரஜினி மக்கள் மன்றத்தையும் தொடங்கினார். மன்றத்திற்கு ‌38 மாவட்ட நிர்வாகிகளையும் நியமித்தார். இவை ஒரு புறம் இருக்க, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தமது கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகிறார். இவ்வாறான சூழலில், ரஜினி மக்கள் மன்றத்‌தின் மாவட்டச் செயலாளர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. மாவட்டச் செயலாளர்களுக்கும் நிர்‌வாகிகளுக்கும் ஒற்றுமையில்லாத சூழல் நிலவுவதால், அவர்களை ஒற்றுமையாக செயல்படுமாறு‌ அ‌றிவுறுத்த ரஜினிகாந்த் விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்காக மாவட்டச் செயலாளர்கள் 38 பேரும் சென்னைக்கு புறப்பட்டு வருமாறு தொலைபேசியில் அழைக்கப்பட்டுள்ளனர்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, காணொலிக்காட்சி மூலம் ரஜினிகாந்த் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் புதிய நிர்வாகிகள், பூத் கமிட்டிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும், கிராமங்களில் ரஜினி மக்கள் மன்றம் இயங்கும் விதம் குறித்து பேசப்படும் என்றும் தெரிகிறது.

3 அல்லது 5 மாவட்டங்களுக்கு ஒரு மாநில பொறுப்பாளர் நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. என்னென்ன மக்கள் நலத்திட்டங்கள் செய்யலாம் என்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாகவும், 4 இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்துவது குறித்து விவாதிக்கலாம் என‌ ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காணொலிக்காட்சி முறையில் பேச உள்ள ரஜினிகாந்த், நேரிலும் வரக்கூடும் என்று தெரிகிறது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com