Published : 09,Jun 2017 02:11 AM

தவான் தாண்டவம் வீண்: தண்ணி காட்டியது இலங்கை!

Champions-Trophy--Sri-Lanka-Beat-India

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதின. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இருவரும் பக்குவமாக ஆடி இலங்கையில் பந்துவீச்சுகளை பதம் பார்த்தனர். அணியின் ஸ்கோர் 138 ரன்களாக இருந்தபோது, ரோகித் சர்மா 78 ரன் (79 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) மலிங்கா பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி டக்-அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்ற, யுவராஜ்சிங்கும் 7 ரன்னில் எதிர்பாராத முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து தவானுடன் இணைந்தார் டோனி. அபாரமாக ஆடிய தவான் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். தவானும், டோனியும் ஸ்கோரை ஏற்றினர். மலிங்கா வைடாக வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்த தவான் கேட்ச் ஆனார். அவர் 125 ரன்கள் (128 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். டோனி, 63 ரன்களில் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. கேதர் ஜாதவ் 25 ரன்களுடன் (13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 322 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியின் குணதிலகாவும், குசல் மென்டிசும் பந்துகளை விளாசினர். குணதிலகா 76 ரன்களிலும் குசல் மெண்டிஸ் 89 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள்.  47 ரன்கள் எடுத்த  பெரேரா தசைப்பிடிப்பால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். பின்னர் மேத்யூஸ் 52 ரன், குணரத்னே 34 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்த அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்து அபார வெற்றி கண்டது. இந்த மைதானத்தில் சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது. இதன் மூலம் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. 89 ரன்கள் எடுத்த மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்