[X] Close

எம்பி சீட் இழுபறி: அதிமுக - தேமுதிக இடையே தொடரும் ஆடுபுலி ஆட்டம்..!

அரசியல்,சிறப்புச் செய்திகள்,தமிழ்நாடு

The-Cold-War-has-begun-between-Aiadmk-and-Dmdk

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களான சசிகலா புஷ்பா, செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த், டி.கே.ரங்கராஜன், முத்துக்கருப்பன் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

பதவிக்காலம் நிறைவுபெறும் இந்த 6 பேரில் 5 பேர் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒருவர் திமுக சார்பில் தேர்வானவர். தற்போது சட்டசபையில் திமுகவின் பலம் உயர்ந்திருக்கிறது. இதனால் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கூடுதலாக இருவர் என மொத்தம் 3 பேரைத் தேர்வு செய்ய முடியும். அதிமுகவைப் பொருத்தவரை 5 பேருக்குப் பதிலாக 3 பேரை மட்டுமே தேர்வு செய்ய இயலும். இதனால் மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் குறையும். அதேசமயம் திமுகவின் பலம் 5 ல் இருந்து 7 ஆக உயரும்.


Advertisement

திமுக வழக்கம் போல் வேகமாக வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுவிட்டது. அதில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் புதிய நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆளும் கட்சியான அதிமுக இன்னும் பட்டியலை வெளியிடவில்லை.

image

அதிமுக வசமுள்ள மூன்று எம்பி பதவிகளுக்கு யார் யார் தேர்வு செய்யப்படப் போகிறார்கள் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது. ஆனாலும், அதிமுக மாநிலங்களவையில் திமுகவின் பலத்துடன் ஒப்பிடுகையில் அதிக சேதம் இல்லாமல் தன் பலத்தைத் தக்கவைக்கவே விரும்பும். ஆனால் இதற்கிடையில் தேமுதிக ஒரு சீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அதிமுக அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் கொஞ்சம் மறைமுகமான கருத்துகள் மூலம் தேமுதிகவிற்கு உணர்த்தி வருகிறது.


Advertisement

“சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை” - கே.பி.முனுசாமி

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகக் கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்தோடு இருக்கிறோம். இன்னும் இரு தினங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து எங்கள் உரிமையைக் கேட்போம்” எனக் கூறியிருந்தார்.

image

பிரேமலதா, இரண்டு தினங்களில் முதல்வரை சந்திப்போம் என்றார். ஆனால் அவர் சொன்ன அன்றைய மாலையே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்தார். அடையாரில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மாநிலங்களவை எம்பி பதவி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் இந்த விவகாரம் குறித்துக் கடந்த 26 ஆம் தேதியே முதல்வர் பழனிசாமி, “தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தருவது குறித்து தலைமைக் கழகமே முடிவு செய்யும். எம்.பி பதவியை கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் முடிவெடுப்பது அதிமுக தலைமைதான்” என விளக்கம் அளித்திருந்தார். அவர் அப்படி பேசிய பிறகே எல்.கே.சுதீஷ் உடனான சந்திப்பு நடந்தது. ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பது இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அந்தச் சந்திப்புக்குப் பிறகு விருதுநகர் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பின் அவரிடம் இதே விவகாரம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், “வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பதைபோல், கூட்டணி கட்சியினரும் சீட் கேட்கதான் செய்வார்கள்” என்றார். ஆனால் அவர் வெளிப்படையாகத் தருவோம் என்றோ? இல்லை என்றோ? கூறவே இல்லை.

image

இந்நிலையில்தான், அமைச்சர் ஜெயக்குமார், “தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்பி பதவி தருவதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்தது” என தெரிவித்தார். ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு, பூதாகரமாகக் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விவகாரத்திற்குச் சட்டென்று ஒருமாதிரியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. எம்பி சீட் கேட்பதற்கு தார்மீக உரிமையில்லை என்பதையே ஜெயக்குமாரின் பேட்டி தெளிவுபடுத்தியுள்ளது.

மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதுகூட தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட்டு வழங்கப்படும் என்பதைப்போல் எந்தவொரு ஒப்பந்தமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், அதே சமயம் பாமகவுடன் ஒரு எம்.பி. சீட் கொடுப்பதற்கான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அப்போதுகூட பாமகவைக் குறிப்பிட்டு தங்களுக்கும் அதே பலத்துடன் சீட் வழங்க வேண்டும் என சுதீஷ் உட்படப் பலர் தேமுதிகவில் கருத்து தெரிவித்தனர். அதிமுகவை இடைத்தேர்தலில் ஆதரிப்பது மற்றும் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடுவது போன்ற ஒப்பந்தங்களே வெளிப்படையாகப் பகிரப்பட்டன. ஆனால் இப்போது பிரேமலதா கூட்டணி தர்மத்தை தேமுதிக கடைப்பிடிக்கிறது என்கிறார்.

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு : மூவரும் கடந்து வந்த பாதை...!

ஆனால், அந்தத் தர்மம் என்ன என்பது வெளிப்படையான ஒப்பந்தங்கள் மூலம் கூறப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை வரும் 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஏதாவது பேச்சு வார்த்தை நடந்து வருகிறதா எனத் தெரியவில்லை. அதை மனதில் கொண்டு பிரேமலதா மறைமுகமாக எதையாவது உணர்த்துகிறாரா என்பது தெரியவில்லை.

image

தேமுதிகவிற்கு இப்போது இது தர்மசங்கடமான காலம்தான். தேமுதிகவை பொறுத்தவரை ஒன்று அதிமுக கூட்டணியில் இடம்பெறவேண்டும், இல்லையெனில் தனித்துப் போட்டியிட வேண்டும். ஏனெனில், அவர்கள் திமுக பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. துரைமுருகன் அதற்காகக் கதவை நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலேயே முழுவதுமாக அடைத்துவிட்டார். அந்தக் கசப்பை மீறி திமுக வரும் தேர்தலில் தேமுதிகவுடன் இணையாது என முன்கூட்டியே ஆருடம் கூற முடியாது. ஏனெனில் அதுதான் அரசியல். ஆக, அதிமுக - தேமுதிக கூட்டணி என்பது இப்போது ஒரு சீட் என்ற போராட்டக் களத்தில் நிற்கிறது. ஆட்சியில் இருக்கும் அதிமுகவைவிட அந்த ஒரு எம்.பி. சீட் தேமுதிகவிற்கு மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது. அந்தப் பதவி அக்கட்சிக்கு ஒரு புதிய ரத்தத்தைப் பாய்ச்சலாம். ஆக, தேமுதிக பாயுமா? அல்லது பாசமாக விட்டுக் கொடுக்குமா? என்பது பெரிய ஆடுபுலி ஆட்டம்தான்.


Advertisement

Advertisement
[X] Close