
வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால், யானைகளுக்கு கூடுதல் நீராதாரங்களை அமைக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் காரமடை வனச்சரக பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் என பல்வேறு காட்டு உயிர்கள் உள்ளன. கோடைக்கு முன்னரே கடும் வெப்பம் நீடித்து வருவதால், வனத்தில் உள்ள இயற்கை நீராதாரங்கள் வறண்டு போய் உள்ளன. இதனால் தண்ணீர் தேடி அலையும் யானைகள், வன எல்லைகளில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்தபடி இருக்கின்றன.
கடந்த மழைக்காலத்தில் போதுமான அளவு பருவமழை பெய்ததால் இவ்வனப்பகுதியில் இருந்த வனக்குட்டைகள், நீரோடைகளில் நீர் நிரம்பி இருந்தது. ஆனால், கடந்த இரு மாத காலமாக வனப்பகுதியில் வழக்கமாக பெய்யும் சாரல் மழை பெய்ய வில்லை. இதனால் இயற்கையான நீராதாரங்கள் பெரும்பாலும் வறண்டு விட்டன. ஆகவே தாகத்தில் நீர் தேடி அலையும் யானைகள் தண்ணீரை தேடி வனத்தை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் புகும் அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே யானைகளுக்கு வன எல்லைகளில் கட்டப்பட்டிருந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறை செய்தது. இதனையடுத்து யானைகள் கூட்டம் கூட்டமாக இந்தத் தொட்டிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. சுமார் 1500 முதல் 2000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் பத்து முதல் பதினைந்து வரை கட்டப்பட்டுள்ளன.
இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும் போது “ கோடைக்கு முன்னதாகவே வனத்தில் வறட்சி துவங்கியுள்ளது வேதனை அளிக்கிறது. ஒரே ஒரு முறை ஆறு யானைகள் வரை உள்ள ஒரு யானைக்கூட்டம் நீர் அருந்தினால் இத்தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதுமாக காலியாகி விடும். இதனால்
வரும் கோடை காலத்தில் மனித யானை மோதலை தவிர்க்க கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை கட்டி அதில் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்” எனக் கூறினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது “ஒரு நாளைக்கு இரண்டு முறை தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் கூடுதலாக தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.