Published : 01,Mar 2020 01:45 PM
ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் ‘அருவா’

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ‘அருவா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
சூர்யா நடிக்கும் 39வது படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘அருவா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவை வைத்து இவர் இதற்கு முன் இயக்கிய ‘சிங்கம்’ மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து ஹரி, 6வது முறையாக இவருடன் இணைய இருக்கிறார். இதுவரை ஹரி 16 படங்களை இயக்கி இருக்கிறார்.
‘அருவா’ படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூர்யாவின் திரைப்படத்திற்கு இமான் முதன்முறையாக இசையமைக்க இருக்கிறார். ஹரி படங்களுக்கு தேவிஸ்ரீபிரசாத் எப்போதும் இசையமைப்பாளராக இருந்துள்ளார். இந்தக் கூட்டணி திரையில் ஒரு வெற்றிக் கூட்டணியாக இருந்திருக்கிறது. ஆனால் ஹரி, அவரைத் தவிர்த்து முதன்முறையாக இமானுடன் கைகோர்த்துள்ளார்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக முழுப் படத்தின் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனையடுத்து ‘அருவா’ இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.