''டர்பனை கட்டி அழைத்துச்சென்றேன்'' - 70 முஸ்லீம்களை பாதுகாப்பாக இடம் மாற்றிய சீக்கியர்

''டர்பனை கட்டி அழைத்துச்சென்றேன்'' - 70 முஸ்லீம்களை பாதுகாப்பாக இடம் மாற்றிய சீக்கியர்
''டர்பனை கட்டி அழைத்துச்சென்றேன்'' - 70 முஸ்லீம்களை பாதுகாப்பாக இடம் மாற்றிய சீக்கியர்

டெல்லி கலவரத்தின் போது சிக்கிக் கொண்ட 70 முஸ்லீம்களை சீக்கியர் ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது.

டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, அப்பகுதியில் மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கு வன்முறை பரவி ஆங்காங்கே கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் 42 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சில நாட்களாக போராட்டம், கலவரம் என பரபரப்பாக இருந்த டெல்லி தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், டெல்லி கலவரத்தின் போது சிக்கிக் கொண்ட 70 முஸ்லீம்களை சீக்கியர் ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற மனிதநேய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதங்களைத் தாண்டி மனிதம் இருப்பதாக பலரும் அந்த சீக்கியருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள மஹிந்தர் சிங், நானும் எனது மகனும் 70 முஸ்லீம்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றோம். நான் ஸ்கூட்டர் வைத்திருந்தேன். எனது மகன் பைக் வைத்திருந்தான். நாங்கள் கோகுல்புரியில் இருந்து கர்டம்புரிக்கு 20 தடவை சென்று வந்தோம்.

கலவரத்தால் அவர்கள் பயத்தில் இருந்தனர். குழந்தைகளையும், பெண்களையும் முதலில் இடம் மாற்றினோம். பிறகு அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றோம். இந்தக்கலவரம் எனக்கு 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை நினைவுப்படுத்தியது. நாங்கள் கட்டும் டர்பனை முஸ்லீம்களுக்கு கட்டி அழைத்துச் சென்றோம். அதனால் யாருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. நாங்கள் யாருக்குள்ளும் மதத்தை பார்க்கவில்லை. மனிதத்தை மட்டுமே பார்த்து இப்படி செய்தோம் என தெரிவித்துள்ளார். மஹிந்தர் சிங்கிற்கும் அவரது மகனுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com