Published : 29,Feb 2020 10:03 AM
துப்பாக்கிச் சுடும் அஜித்.. வைரலான புகைப்படம்...!

நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படப்பிடிப்பின்போது அஜித், சிறிய பைக் விபத்தில் சிக்கினார். ஆனால் இது குறித்து வெளியே தகவல் கசியவே இல்லை. இந்த விபத்தில் அஜித்திற்கு அதிக காயம் ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அஜித்திற்கு அறிவுரை கூறியிருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இதனிடையே அஜித்திற்கு காயம் ஏற்பட்டதற்குப் பிறகு அவர் முதன்முறையாக அவரது மேனஜரின் குடும்பத்தார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அஜித் திருமண மண்டபத்தின் வாசலிலேயே நின்று அனைவரையும் வரவேற்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும் இந்த விழாவில் அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதிகம் பகிரப்பட்டன.
"சிஏஏ இந்துக்களுக்கும் எதிரானதுதான்" இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு
இந்நிலையில் அஜித், துப்பாக்கிச் சுடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரலாக மாறியுள்ளது. காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு அவர் குறிவைத்து சுடுகிறார். காதில் உள்ள ஹெட்ஃபோனில் நம் நாட்டின் தேசியக் கொடி வரையப்பட்டுள்ளது. அஜித், சாதாரணமான பச்சை நிற டி-ஷர்ட்டில் இருக்கிறார்.
அஜித்திற்கு துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் பல காலமாகவே ஆர்வம் இருந்து வருகிறது. அவர் அதற்காக முறைப்படி பயிற்சியும் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த 45 ஆவது தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகின. அதனையடுத்து இப்போது மீண்டும் தனது விருப்பமான விளையாட்டில் ஈடுபட்டு வரும் புகைப்படம் ஒன்று வைரலாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.