நெஞ்சை உலுக்கும் வன்முறை புகைப்படங்கள்: வாழ முடியாத இடமாகிறதா டெல்லி?

நெஞ்சை உலுக்கும் வன்முறை புகைப்படங்கள்: வாழ முடியாத இடமாகிறதா டெல்லி?
நெஞ்சை உலுக்கும் வன்முறை புகைப்படங்கள்: வாழ முடியாத இடமாகிறதா டெல்லி?

ஒரு பெரும் வன்முறையை கடந்து தலைநகர் டெல்லி சற்றே ஓய்ந்து இருக்கிறது. சிஏஏ எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் கிழக்கு டெல்லியே கடந்த சில நாள்களுக்கு முன்பு கலவர பூமியானது. கற்களும், கட்டைகளும், கத்திகளும், துப்பாக்கிகளும் கொலை ராகம் பாடின. ஊரெல்லாம் மரண ஓலங்கள், தங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று எங்கினும் கூக்குரல்கள். இவையெல்லாம் நடந்து முடிந்து 38 உயிர்களை காவு வாங்கியபடி, இப்போது எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது டெல்லி. ஒரு பெரும் இயற்கை சீற்றம் ஏற்பட்டு முடிந்த பின்பு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்த்தால் ஒரு வெறுமை தெரியும், அத்தகைய சூழலில் இருக்கிறது கிழக்கு டெல்லி.

இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்புகளை மனிதன் ஏற்றுக்கொள்வான், ஏனென்றால் அது இயற்கை. ஆனால் டெல்லியில் நடந்தது ஏதோ சிலரின் சுயநலத்துக்காக நடத்தப்பட்ட கலவரம். அதில் பலியானது அப்பாவி பொது மக்கள்தான். எப்போதும் சுயநலக்காரர்களால் ஏற்படுத்தும் கலவரத்துக்கு பலியாவது எங்கும் எதிலும் சாராமல் இருக்கும் அப்பாவிகள்தான். மேலும், கலவரத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் காவலர்களும்தான். இந்தக் கலவரத்தில் டெல்லி இரண்டு காவல்துறையினரை இழந்துள்ளது. இருவரின் கொலையும் ஏதோ ஒரு குழுவினரின் கொலை வெறியாட்டத்துக்கு பலியாகியுள்ளார்கள்.

கலவரத்தின் உச்சக்கட்ட வன்மம் என்பது அப்பாவி மக்களின் உடமைகளுக்கு பங்கம் விளைவிப்பதே ஆகும். கிழக்கு டெல்லியில் வசிப்பவர்கள் பெரும்பாலம் அண்டை மாநிலங்களில் இருந்து பிழைக்க வந்தவர்களே ஆகும். மிக முக்கியமாக உத்தரப் பிரதேசம், பீகாரில் இருந்து வந்து கூலிகளாகவும், ஏதோ கடைகளில் வேலை செய்து தினசரி வாழ்க்கையை ஓட்டுபவர்கள். இப்போது அந்த பிழைப்புத் தேடி நிம்மதியாக வாழலாம் என நினைத்தவர்கள் மனதில் பெரும் பாரம், கண்களில் பயம். கண்ணெதிரே நமக்கு தெரிந்தவர்கள் அடிக்கும்போதோ நம்முடைய உடைமை நம்முன்னே சூறையாடப்படும்போதும் எப்படி அந்த ஊரில் நிம்மதியாக வாழமுடியும், இரவில் உறங்கும்போதும் வன்முறை திரைகள் விரியும் அல்லவா?.

பிழைப்புத் தேடி வந்தவர்கள் இப்போது உயிரையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என்று சொந்த மாநிலங்களுக்கு திரும்ப தொடங்கியிருப்பது வேதனையான விஷயம். இப்போது நெஞ்சை உலுக்கும் ஏராளமான புகைப்படங்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன. அதில் ஒரு சிறுவன் சடலமாக கிடக்கும் தனது தந்தையின் உடலை பார்த்து கதறும் புகைப்படம் மனதை உலுக்குகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் "அந்தச் சிறுவன் முஸ்லீமா அல்லது இந்துவா என தெரியவில்லை. இந்தக் கலவரத்தில் வெறுப்பும் அரசியலும் வென்றுவிட்டது, ஆனால் மனிதர்களான நாம் மனிதத் தன்மையை இழந்துவிட்டோம்" என வலியோடு பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட உளவுப் பிரிவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் மனைவி கதறி அழும் புகைப்படமும் பார்ப்பவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல எத்தனையோ அடிப்பட்ட தன் பிள்ளையை "ட்ரை சைக்கிளில்" மிதித்துக்கொண்டு மருத்துவமனை கொண்டு செல்லும் புகைப்படம் பதறவைக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது டெல்லி மனிதர்கள் வாழும் இடம்தான், இன்னமும் மனிதம் இருப்பதால்தான் மெல்ல மெல்ல மீண்டெழுகிறது நாட்டின் தலைநகரம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com