Published : 27,Feb 2020 05:58 AM
கொரோனாவால் கிடுகிடுவென உயருகிறதா தங்கம் விலை?

புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்ன?
தங்கம், பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தென்னிந்தியாவிலேயே அதிகளவு தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக பொருளாதார மந்தநிலை ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், சர்வதேச அளவில் ஏற்படும் பதற்றமான சூழலும் இதன் விலை உயரக் காரணமாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் ஒரு பதற்றம் ஏற்படுகிறது என்றால், அப்போது முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் செய்த முதலீட்டை வெளியே எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதுதான் வழக்கம். அந்த வகையில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஜனவரி மாதத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 31,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. போர்ப் பதற்றம் குறைந்ததையடுத்து மஞ்சள் உலோகத்தின் விலை சற்று குறைந்தது.
இந்நிலையில், சீனாவில் கொடூர தாக்குதலை ஏற்படுத்தி உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றம் கண்டு வருவதாக ஆபரணத் தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த்: ஒளிபரப்பு தேதியை வெளியிட்ட தொலைக்காட்சி
பல நாடுகளில் தங்கத்தை முதலீடாக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் நம் நாட்டில் விஷேச நாட்களில் தங்கத்தை அணிவது பாரம்பரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கம் அணிவதை அனைவரும் விரும்புவது ஒருபுறமிருந்தாலும் திருமணம், சீர்வரிசை செய்வது போன்ற கட்டாயத் தேவைகளுக்காக தங்கத்தை வாங்குவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். அமெரிக்கா - ஈரான் போர்ப்பதற்றம் குறைந்தவுடன் தங்கம் விலை சற்று தணிந்ததுபோல் கொரோனா பாதிப்பு குறைந்ததும் அதன் விலை சற்று குறையலாம் என்கின்றனர் முதலீட்டு ஆலோசகர்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.29,880-க்கு விற்கப்பட்டது. அப்போது அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ப்பதற்றம் அதிகரித்ததையடுத்து ஜனவரி 8-ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.31,432 என புதிய உச்சம் கண்டது. தொடர்ந்து சில நாட்களில் போர்ப்பதற்றம் தணிந்ததையடுத்து தங்கத்தின் விலையும் சற்று தணிந்து ஜனவரி 14-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.30,112 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக, சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. பிப்ரவரி 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.31,184-க்கும், பிப்ரவரி 15ஆம் தேதி ரூ.31,392-க்கும், பிப்ரவரி 19 ஆம் தேதி ரூ.31,720-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் ஆபரணத் தங்கம் இதுவரை இல்லாத அளவாக பிப்ரவரி 24-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக சற்று குறைந்துள்ளது.
சிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது
வரும் நாட்களில் குளிர்காலம் குறையும்போது கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே கட்டாயத் தேவை இல்லை என்றால் தங்கம் வாங்குவதை சற்று தள்ளிப் போடலாம் என்பதே பல தரப்பினரின் கருத்தாக உள்ளது