
பரபரப்புகளுக்கும், விறுவிறுப்புகளுக்கும் சிறிதும் பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் நடப்பு சீசன் வரும் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது முதலே மகேந்திர சிங் தோனியின் வருகை குறித்து ரசிகர்கள் உற்சாகம் கலந்த பல எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர். சென்றாண்டு நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக தோனியை களத்தில் காணாத ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
சிறிய ஓய்வுக்குப் பின்னர் அடுத்தடுத்த தொடர்களில் அணிக்கு திரும்பிவிடுவார் என்ற ரசிகர்களின் ஊகங்கள் அனைத்தும் ஊகங்களாகவே கடந்து சென்றன. ஐபிஎல் ஃபார்மை பொறுத்தே இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படும் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியது ரசிகர்களுக்கு கூடுதல் ரணம். இதனால் ஐபிஎல் பயிற்சி களத்திற்கு தோனி எப்போது வருவார் என்ற அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சம் பெற்றது.
இந்நிலையில் தோனியின் ஆட்டத்தைக் காணாமல் வறண்ட பாலைவனம் போல இருந்த ரசிகர்களின் மனநிலை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி விஸ்வநாதன் அளித்துள்ள ஒரு தகவலால் வசந்தம் பெற்றுள்ளது.
மார்ச் 2ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் ஐபிஎல்லுக்கான பயிற்சியில் இறங்கப்போகிறார் என்பதே அந்த தகவல். கடந்த ஐபிஎல் சீசனுக்கான பயிற்சியின் போது மைதானத்தில் தோனிக்கு ரசிகர்கள் அளித்த ஆரவாரமான வரவேற்பு மெரினா அரங்கையே அதிர வைத்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்களின் குகை என்று வர்ணிக்கப்படும் சேப்பாக்கம் மைதானம், ரசிகர்களின் ஆரவாரமான கர்ஜனைகளுடன் தோனியை வரவேற்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்