ஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு

ஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு
ஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மாமேதை கார்ல் மார்க்ஸின் முக்கியமான வாசகம். இந்த வாசகம் எல்லா துறைகளையும் போலவே அரசியலுக்கும் பொருந்தும்தானே. அரசியல் மட்டும் விதிவிலக்கு ஆக முடியுமா?. 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் அரசியல் களத்தை உற்று நோக்கி வருபவர்களுக்கு தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் போக்குகள் சற்றே வியப்பை அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆம், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுக்க ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நியமிப்பார்கள் என மூத்த அரசியல்வாதிகளும், அரசியல் நிபுணர்களும் நிச்சயம் நினைத்திருக்கமாட்டார்கள்.

அதுவும், நீண்ட காலமாக அரசியல் களத்தில் இருக்கும், ஆட்சியிலிருந்த, ஆட்சியில் இருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் இப்படியான ஒரு முடிவினை வெளிப்படையாக அறிவித்திருப்பது குறித்து பலரும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை தெளிவான விரிவான கட்டமைப்பு உள்ள கட்சிகள் தங்களது தேர்தல் வியூகத்திற்காக ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் பொறுப்புகளைக் கொடுப்பது என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சார்ந்த ஐபேக் நிறுவனம் 2021 சட்டசபைத் தேர்தலையொட்டி தங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாகத் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்பும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளனதான். ஆனால், இந்த நிறுவனம்தான் இந்த கட்சிக்கு பணியாற்றியுள்ளது என்று வெளிப்படையாகப் பெரிய அளவில் தெரியவில்லை. தீவிரமாகக் கவனித்து வரும் அரசியல் ஆர்வலர்களுக்கு மட்டுமே தெரியும். அப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பும் குறைவானதாக இருக்கும். ஆனால், தற்போது, பிரதமர் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வெளிப்படையாக பொது மேடைகளில் பிரசாந்த் கிஷோர் தோன்றுகிறார். இதுதான், காலம் கொடுத்துள்ள மாற்றம்.

திமுக சார்பில் ஐபேக் என்ற கார்ப்பரேட் நிறுவனம் களமிறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக மற்றொரு கார்ப்பரேட் நிறுவனம் வருகை தந்துள்ளது. ‘டெமோஸ் இந்தியா’ என்ற கார்ப்பரேட் நிறுவனம் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் தனது பணியைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசியல் களத்தில் பணியாற்ற ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தையும் வெளிப்படையாக வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆளும் அதிமுக அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அதிமுக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

     அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியான சில தார்மீக பண்புகள் இருக்கின்றன. அதனை, அரசியல் கட்சிகள் இதுவரை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கே கொள்கை வழிநின்று வெற்றியைத் தேட முயற்சி செய்துவந்தார்கள். அரசியல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எவ்வித அரசியல் கொள்கைகளும் கிடையாது. பல கோடிகளைப் பெற்றுக் கொண்டு பணிபுரியும் இவர்கள், ஒரு கட்சியினை வெற்றி பெற வைக்க எந்த எல்லைக்கும் செல்லக் கூடும் என்ற அச்சம் அரசியல் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நிச்சயம் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com