[X] Close

டக்வொர்த் லீவிஸ் முறை ஐசிசிக்கே புரியாது... விளையாட்டாக விளாசும் தோனி!

Dhoni-Says-Even-ICC-Doesn-t-Understand-Duckworth-Lewis-Method

டக்வொர்த் லீவிஸ் முறை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் முழுமையான புரிதல் இருக்கும் என தான் நினைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி விளையாட்டாகக் குறிப்பிட்டார்.
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்கள், விராத் கோலியின் தொண்டு நிறுவனத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம் கிரிக்கெட் போட்டிகளில் முடிவைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் டக்வொர்த் லீவிஸ் முறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கேள்வி எழுப்பியவரை நோக்கி, நீங்கள் கிரிக்கெட் போட்டிகள் குறித்து நீண்டகாலம் அறிந்தவராகத் தெரிகிறீர்கள். டக்வொர்த் லீவிஸ் முறை குறித்து உங்களால் முழுமையாக விளக்க முடியுமா?. ஏன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்குக் கூட அந்த முறை குறித்து முழுமையாகத் தெரியும் என்று நான் நினைக்கவில்லை என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார். 
மழை உள்ளிட்ட அசாதாரண சூழல்களின்போது போட்டி முடிவை நிர்ணயிக்க டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், சிக்கலான இந்த முறை குறித்து கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமின்றி, கேப்டன்கள் வரை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. ஆனால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணிக்கு முதலில் 324 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மழை குறுக்கிடவே இலக்கு 40 ஓவர்களில் 289 ஆக மாற்றியமைக்கப்பட்டது. இந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close