Published : 21,Feb 2020 04:35 PM

“பணமோ, வார்த்தையோ உயிரிழப்பை ஈடுசெய்யாது” - சிம்பு

actor-silambarasan-statements-about-indian-2-incident

 ’இந்தியன்2’  படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  


கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் ‘இந்தியன்2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த EVP பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றி வந்த சங்கரின் உதவியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து லைகா தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் இந்த விபத்து குறித்து நடிகர் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

image

 இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன்.இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்