Published : 17,Feb 2020 08:19 AM
சேலத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் கொலை.. திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி

சேலத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சைக்கோ கொலையாளியுடன், பலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த முதியவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தக் கொலைகள் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே சூரமங்கலத்தில் ஆதரவற்ற முதியவரை இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியானது. சிசிடிவி காட்சிகளில் பதிவான உருவ ஒற்றுமையின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்த விசாரணையில் முதியவர்களை அடுத்தடுத்து கொலை செய்தது ஒரே நபர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கைப்பற்றியுள்ள சிசிடிவி காட்சியில், கருப்பு நிற டீ-சர்ட் அணிந்த வேறொரு நபர் வணிக வளாகத்தில் நடைபெற்ற கொலைகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ள நபர் முறையான தகவல்களை சொல்லாத நிலையில் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.