[X] Close

குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்களுக்கு என்னதான் தீர்வு..? - இனியொரு விதி செய்வோம்..!

தமிழ்நாடு

There-is-no-end-for-child-abuse-in-Tamil-Nadu

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக மாறியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே இது சாபக்கேடாக இருக்கிறது. இதனை தடுப்பதற்காகவே போக்சோ சட்டம், சிறார் ஆபாச வீடியோ தடை, சிறப்பு நீதிமன்றம், மரண தண்டனைகள் என பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு, நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வந்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. நாள்தோறும் நெஞ்சை பதறவைக்கும் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

image

அந்த வகையில் அண்மையில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று அனைவரது மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் 7 வயது சிறுமியை தாய் மாமன் உள்ளிட்ட 15 உறவினர்களே பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூரத்தை விட கொடுமை என்னவென்றால், குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த 15 பேரும் 45 நாட்களிலேயே ஜாமீனில் வெளியாகியிருக்கின்றனர். அவர்கள் ஜாமீன் பெற்றதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தாலும், குற்றம் செய்தவர்கள் எளிதில் வெளிவர முடியுமா ? என்ற கேள்வி சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும் எழுகிறது. இவ்வாறான குழந்தைகள் மீதான கொடூரங்களை தடுக்க என்னதான் வழி என்றும், இதற்கு போக்சோ சட்டம் போதுமானதா ? என்றும் சந்தேகிக்கச் செய்கிறது.


Advertisement

image

இதுகுறித்து புதிய தலைமுறையிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட ஓய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி, “காவல்துறை மீது இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. சட்டத்தில் எந்த வித குறைகளும் இல்லாத வகையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதே காவல்துறையின் பணி. இதுபோன்ற விவகாரங்களில் காவல்துறைக்கே தெரியாமல், வழக்கறிஞர்கள் ஜாமீன் பெற்றுக்கொடுக்கின்றனர். இதுபோன்ற வழக்குகளை ஃபாஸ்ட்ராக் விசாரணையில் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் ஒருவாரத்திற்குள் கூட விசாரணையை முடிக்கலாம்” என்றார்.

image


Advertisement

வழக்கறிஞர் சாந்தக்குமாரி கூறும்போது, “சட்டத்தை பொருத்தவரையில் பெரிதாக குறைகள் இல்லை. ஆனால் இன்னும் செழுமைப்படுத்த வேண்டியிருக்கலாம். எந்த ஒரு வழக்கிலும் 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் பெற வழி கிடைத்துவிடும். இதுபோன்று சில காவல்துறையினர் செய்யும் தவறுகளால் குற்றவாளிகள் ஜாமீன் பெறுகிறார்கள். போக்சோ சட்டத்தை பொருத்தவரையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தை இறந்திருப்பது மிகப்பெரிய தண்டனையை குற்றவாளிகளுக்கு அளிக்க வழிவகுக்கும். பாலியல் வழக்குகளில் விசாரணை நடத்துவது தொடர்பாக காவல்துறைக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

image

சமூக செயற்பாட்டாளர் அஜிதா பேசும்போது, “மாதந்தோறும் இதுபோன்ற அதிர்ச்சி செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் அதிகாரிகள் மெத்தனமான செயல்படுவதுதானோ என்ற சந்தேகம் வருகிறது. இதுபோன்ற விவகாரங்களில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 6 மாதத்திற்குள் விசாரணையை முடித்து, ஒரு வருடத்திற்குள் மேல்முறையீடுகளையும் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. இவ்வாறு வழக்குகளை தாமதப்படுத்துவதால் குற்றவாளிகளுக்கு அச்சம் என்பது இல்லாத நிலை உருவாகிறது” என்று கூறினார்.

போக்சோ சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான கடுமையான தண்டனைகளை வைத்திருந்தாலும், அந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறோம் என்பது, இந்தச் சமூகம் குழந்தைகளுக்கு பாதுகாப்பை கொடுக்க தவறுகிறது என்பதையே காட்டுகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறையில் குறைகள் இருக்கிறது என்றாலும், அதேசமயம் கட்டாயம் இல்லாத நேரங்களிலும் கூட நீதிமன்றங்களிலும் ஜாமீன் வழங்கப்படுவதும், உரிய கேள்விகள் கேட்கப்படாததும் மற்றொரு குறையாகும். முதலில் பாலியல் புகார்களை தெரிவிப்பது தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள், பள்ளிக்கூடங்கள், சுவரொட்டிகள் என அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு தேவை. அதற்கான புகார் எண்களையும் அரசு அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

image

விழுப்புரம் எம்பி ரவிக்குமார் புதிய தலைமுறையிடம் பேசியபோது, “போக்சோ சட்டத்தின் கீழ் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. குழந்தைகள் பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மோசமான செயல். போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கென தனியாக நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். மகிளா நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை விசாரிக்காமல், தனியாகவே நீதிமன்றங்களை அமைத்து விரைந்து விசாரிக்க வேண்டும்” என்ற கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.image

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறும்போது, “இதுபோன்ற ஒரு கொடூரமான வழக்கில் உடனே ஜாமீன் கொடுக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் யார் என்பதை சிந்திக்க வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருப்பதால்தான் இவ்வளவு சீக்கிரமாக ஜாமீன் கிடைத்திருக்கிறது. விசாரிக்கும் அதிகாரிகளுக்கு, பின்பு தண்டனை கிடைக்கும் என்பது வேறு. ஆனால் வழக்கினை முதலில் அதிகாரிகள் சரியாக விசாரிக்க வேண்டும் என்பதே தேவை” என குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement
[X] Close