[X] Close

மனிதனை யானைகள் எதிரியாக பார்க்கின்றனவா ? - இந்த பகைக்கு முற்றுப்புள்ளி எப்போது?

சிறப்புக் களம்,சுற்றுச்சூழல்

Is-there-an-end-for-Elephant---Man-conflict--

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் யானை தாக்கி 2,398 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வன மற்றும் சுற்றுச் சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

நகர மயமாக்களின் காரணமாக காடுகளின் பரப்பளவு குறைந்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக யானை, சிறுத்தை, புலி போன்ற உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை தேடி நகருக்குள் வருகிறது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் யானை மனிதன் இடையிலான மோதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் பாதிப்பு மனிதன், யானை என இருதரப்புக்குமே இருக்கிறது. பெரும்பாலான சுற்றுச்சூழல் மற்றும் விலங்கியல் செயற்பாட்டாளர்கள் யானை - மனிதன் இடையிலான மோதலை தவிர்க்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

image


Advertisement

இந்தியாவில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை யானை தாக்கி 2398 பேர் உயிரிழந்ததாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் 403 பேரும், நாகாலாந்தில் 397 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 349 பேரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்கள். ஒடிஷா, தமிழகம், கர்நாடகாவிலும் யானை - மனிதன் இடையிலான மோதல் அதிகரித்து இருந்தாலும் ஓரளவுக்கு விழிப்புணர்வு மூலம் பிரச்னைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள்தான் யானை - மனிதன் மோதல் அதிகம் காணப்படும் பகுதிகள்.

யானைகளின் நிலை ?

உலகளவில் முன்பொரு காலத்தில் உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55,000 யானைகளும் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மொத்தம் 27,312 காட்டு யானைகள் இருப்பதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 2761 காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும், அஸ்ஸாம் மாநிலத்தில் 5719 யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

image

யானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர்.அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை என்றே தெரிகிறது.

முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன. வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.

image

ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.

அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்த நிமிடத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.

image

யானைகளின் வீடான காடுகள் துண்டாக்கப்படும் போது, அவற்றின் உறவுகளிடமிருந்து நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன. யானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும் நாம் புரிந்துகொள்ளாத வரை, யானை - மனிதன் இடையிலான பிரச்னைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.


Advertisement

Advertisement
[X] Close