
ஹைதராபாத் அருகே சிறைக் கைதிகள் நடத்தி வரும் பெட்ரோல் பங்க் ஒன்று நான்கு கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது.
அந்தத் தொகை சிறைத்துறை மேம்பாட்டிற்குச் செலவு செய்யப்பட உள்ளது. ஹைராபாத்தின் புறநகரான சான்சல்குடா பகுதியில் உள்ள அந்த பெட்ரோல் பங்க், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளிலேயே பெட்ரோல் விற்பனையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கில் 45 ஆயுள் கைதிகளும் 16 முன்னாள் கைதிகளும் வேலை செய்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் முன்னாள் கைதிகளுக்கு மாதச் சம்பளம் 12 ஆயிரம் ரூபாய்.
ஆயுள் கைதிகள் அவர்களின் நன்னடத்தை, குடும்பச் சூழ்நிலை, பரோலில் வெளியே சென்று விட்டு துல்லியமாக சிறைக்குத் திரும்புவது போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இந்த பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் என சன்சல்குடா சிறை கண்காணிப்பாளர் பி.சைதய்யா கூறியுள்ளார். பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் ஆயுள் கைதிகளில் ஒருவர் கூட இதுவரையில் தப்பித்துச் செல்ல முயற்சித்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.