[X] Close

பாகிஸ்தானை துவம்சம் செய்து கெத்தாக ஃபைனலில் நுழைந்த இந்திய அணி

விளையாட்டு

INDIA-VS-PAKISTAN-SEMI-FINAL-U19-WORLD-CUP-2020-FULL-CRICKET-SCORE--INDIA-THRASH-PAKISTAN-BY-10-WICKETS-STORM-INTO-FINAL

ஒருபுறம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணில் அசத்தலாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது. அதே வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் படை தென்னாப்ரிக்க மண்ணில் நடைபெற்று வரும் UNDER -19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகிறது.

           image

இலங்கை அணியை 90 ரன்கள் வித்தியாசத்திலும், ஜப்பான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய இளம் படை. காலிறுதியில் சவால்மிகுந்த ஆஸ்திரேலிய அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் அசால்டாக வெற்றி பெற்று கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்தது.


Advertisement

image

அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது என்றதுமே மேலும் பரபரப்பு கூடிவிட்டது. உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை இதுவரை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் சமபலத்துடனே மோதிவருகின்றன. அதனால், இன்றையப் போட்டி எப்படியும் இந்திய அணிக்கு மிகவும் கடினமாகதான் இருக்கும் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், களத்தில் நடந்த கதையே வேறு. இந்திய அணியின் இளம் சிங்கங்கள் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் ஆக்ரோஷமாக விளையாடி பாகிஸ்தானை துவம்சம் செய்துள்ளது.

       image

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால், இந்திய பந்துவீச்சாளர்களின் வேகத்தை தாக்குப்பிடிக்கவே முடியவில்லை. ஹைதர் அலி 56 ரன்கள், நஸிர் 62 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. விக்கெட்கள் மளமள என வீழ்ந்ததால் பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

             image

இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்த, கார்த்திக் தியாகி, ரவி பிஸ்னோய், தலா இரண்டு விக்கெட்களை சாய்த்து அசத்தினர். வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு 173 ரன்கள் என்பது எளிதான இலக்குதான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த எண்ணத்திற்கு ஏற்றவாறே இந்திய அணியின் பேட்டிங்கும் இருந்தது.

image

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய திவ்யான்ஷ் சக்ஸேனா, யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 10 ஓவர்களுக்கு மேல்தான் இருவரும் தங்கள் வேகத்தை காட்டினார்கள். இருவரும் அரைசதம் அடிக்க அவர்களது விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தனர். ஆனால், இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் இறுதிவரை ஆட்டத்தை கொண்டு சென்றனர்.

image

கடைசி நேரத்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 99 ரன்களுடன் களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசி சதம் அடித்தோடு வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சக்ஸேனா 59 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 105 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கெனவே மூன்று அரைசதம் அடித்துள்ள ஜெய்ஸ்வால், தற்போது தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

image

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி ஏற்கெனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்று தன்னுடைய கொடியை நாட்டி உள்ளது. தற்போது ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் இறுதிப் போட்டியில் கம்பீரமாக நுழைந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close