Published : 03,Feb 2020 02:48 AM
ரெட் சிக்னலில் ஹாரன் அடித்தால் மேலும் காத்திருக்க வேண்டும் - மும்பை போலீசாரின் அசத்தல் நடவடிக்கை

சிக்னலில் காத்திருக்கும்போது ஹாரன் அடித்தால் காத்திருக்கும் நேரத்தை மேலும் அதிகரிக்கும் புதிய முறையை மும்பை போலீசார் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளனர்
டெல்லிக்கு அடுத்தப்படியாக மும்பையில் காற்றுமாசு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் வாகனங்கள் ஹாரன் அடித்து உருவாகும் ஒலியினால் ஒலி மாசும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 85 டெசிபலுக்கு அதிகமாக ஒலி சென்றால் மனிதனின் செவிக்கும், மூளைக்கும் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் மும்பையில் 85 டெசிபலுக்கு அதிகமாக ஒலி அளவு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வையும் மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மும்பை நகரின் முக்கிய சிக்னல்களில் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனுடன் சிக்னல் காத்திருப்புக்கான கவுண்ட் டவுன் நேரமும் இணைக்கப்பட்டுள்ளது. சிவப்பு சிக்னல் இருக்கும்போது அடிக்கப்படும் தேவையற்ற ஹாரன்களால் டெசிபல் அளவு 85-ஐ தாண்டினால் சிவப்பு சிக்னலின் காத்திருப்பு நேரம் தானாகவே அதிகரிக்கும். இதனால் வாகன ஓட்டிகள் மேலும் காத்திருக்க வேண்டும். மீண்டும் ஹாரன் அடித்தால் மீண்டும் காத்திருக்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறையால் தற்போது ஒலி மாசு குறைந்திருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இது சோதனை முயற்சியாகவே இருக்கிறது என்றும் விரைவில் இதே நடைமுறை மும்பை முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மும்பைவாசிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறை ஒலி மாசை வெகுவாக குறைக்கும் என்றும் நம்புவதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Horn not okay, please!
— Mumbai Police (@MumbaiPolice) January 31, 2020
Find out how the @MumbaiPolice hit the mute button on #Mumbai’s reckless honkers. #HonkResponsiblypic.twitter.com/BAGL4iXiPH