
திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், 2017-ஆம் ஆண்டு அரசு போக்குவத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 81 நபர்களிடம் ரூ. ஒரு கோடியே 62 லட்சம் ஏமாற்றியது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை, திருவண்ணாமலை, கும்பகோணம், கரூர் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களின் சுய விபர குறிப்புகள் அடங்கிய பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார்.