
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 33 பேரை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைத்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வெறும் 33 பேரை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து பணிமனை அனுபவம் தொடர்பான விதிகளில் திடீர் மாற்றம் கொண்டு வந்ததை எதிர்த்து தேர்வர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் 33 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துகொண்ட 1,328 பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து புதிய விதிகள் வகுக்கப்பட்டு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறை சான்றிதழ் சரிபார்த்து வழங்கப்படும் பட்டியலை பெற்ற நான்கு வாரத்தில், தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, இறுதி பட்டியலை தயாரிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் செந்தில்நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.