
அதிமுகவின் இரு அணிகளும் இணைய 60 நாட்கள் பொறுத்திருப்போம் என சசிகலா தன்னிடம் கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்பி ஒருவரும் 10 எம்எல்ஏக்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கட்சியிலிருந்து தன்னை ஒதுங்கச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியிலிருந்து ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அந்த வானளாவிய அதிகாரம் ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது?. அமைச்சர்கள் யார் மீதோ இருக்கும் பயத்தில்தான் இவ்வாறு பேசுகிறார்கள். யார் மீதான பயத்தில் இவ்வாறு அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்பது விரைவில் தெரியும். அமைச்சர்கள் பேசுவதைக் கண்டு நாங்கள் பயப்படப் போவதில்லை. இரு அணிகள் இணைய வேண்டும் என்பதாலேயே இவ்வளவு நாட்கள் ஒதுங்கி இருந்தேன் என்றார். அணிகள் இணைவதற்காக 60 நாட்கள் பொருத்திருந்து பார்க்கலாம் என்று சசிகலா அறிவுரை கூறியதாகத் தெரிவித்த தினகரன், தற்போது கட்சி பலவீனமடையாமல் இருக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.