Published : 16,Jan 2017 06:51 AM

அதிமுகவை கைப்பற்ற முயற்சி: திவாகரன் மீது கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

someone-try-to-catch-aiadmk-say-kb-munusamy

அதிமுகவின் சின்னத்தையும் சொத்துக்களையும் கைப்பற்றும் வகையில் சசிகலாவின் உறவினர் திவாகரன் பேசுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தஞ்சையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கணவரான நடராஜன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திவாகரன் கலந்துகொண்டு பேசிய போது அதிமுகவை துவங்கியது முதல் தாங்கள் தான் நிர்வகித்து வருவதாகவும், 72-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் தாங்கள் தான் களப்பணி ஆற்றினோம் எனவும் பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் நடராஜன்தான் மீட்டார் எனவும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். அதிமுகவையும் சின்னத்தையும் மீட்டவர் ஜானகி அம்மாள்தான் என்றும் அவருடைய ஒத்துழைப்பின் பேரில் ஜெயலலிதா வழி நடத்தி கட்சியை காப்பாற்றி தற்பொழுது ஒன்றரை கோடி தொண்டர்களுடன் வளர்ந்து மாபெரும் இயக்கமாக திகழ்கிறது என்றும் கே.பி.முனுசாமி கூறினார்.

இதையெல்லாம் மறைத்து அதிமுகவையும் அதிமுக சின்னமான இரட்டை இலையையும் அதன் சொத்துக்களையும் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றும் வகையில் திவாகரன் பேச்சு அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாகக் கூட இல்லாத இவர்கள் இது போன்று பேசுவதற்கு அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஓ.பி.எஸ்., மக்கள் எளிமையாக சந்திக்கும் முதல்வராக செயல்படுகிறார் என்றும் கே.பி.முனுசாமி கூறினார். அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். திவாகரன் பேச்சு புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உடனடியாக அதிமுக தலைமை உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுகவை யாரும் கைப்பற்றவும் அழிக்கவும் ஒன்றரை கோடி தொண்டர்கள் விட மாட்டோம் என்று கூறிய முனுசாமி, தலைமை பொறுப்புக்கு யார் வந்தாலும் அவர்கள் உத்தரவிற்கு இணங்க விசுவாசமாக பணியாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்