
அடிமைப் பெண் திரைப்படத்தின் 'ஆயிரம் நிலவே வா' முதல் ஷாரூக்கானின் 'நிகால் ந ஜாயே' வரை, விருதுகளையும், ரசிகர்களையும் தன் வசமாக்கிக்கொண்டே இருப்பவர் எஸ்.பி பாலசுப்ரமணியம்.
உங்களின் வாழ்வின் துறுதுறுப்பான குழந்தைப்பருவம் முதல் சாய்ந்து ஓய்வெடுக்கும் முதுமை வரை, வாழ்வின் எல்லா காட்சிகளிலும் பயணித்த குரலுக்கு, எழுதுவதைத் வேறென்ன செய்யமுடியும். எஸ்.பி.பி-யின் குரலுக்கு எல்லா விருதுகளும் தகுதியானதுதான். எஸ்.பி.பி, கே.வி மஹாதேவனின் இசையிலிருந்து, ஏ.ஆர் ரகுமானின் இசைக்கோர்வை வரை அனைத்திலும் பயணித்திருக்கிறார். 6 தேசிய விருதுகளையும், தொடர்ச்சியான ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், நந்தி விருதுகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் விருதுகளையும் மலர்க்கொத்துகளாய் குவித்தவர். விருதுகள் அவருக்கு புதிதல்ல.
ஆர்வமிகுதியிலும், அன்பிலும் இன்னும் கூகுள் செய்தேன். தென்னக மொழிகளிலும், ஹிந்தியிலும் 40,000 பாடல்களைப் பாடி, மில்லியனுக்கும் மேலான இதயங்களில் இசை விருட்சமாய் வளர்ந்திருக்கிறார். என்பதுகளில், தொண்ணூறுகளில் பிறந்தவர்களோ, 2000 ஆண்டிற்கு பின்பு வந்தவர்களோ, யாராக இருந்தாலும், இதயத்தை எந்த அலட்டலும் இல்லாமல் தீண்டும் அந்த குரலை, தாண்டிவராமல் இருந்திருக்க முடியாது. எஸ்.பி.பியின் குரல் உங்களுக்குத் தாலாட்டுப் பாடியிருக்கலாம், சகோதரியாக உங்கள் தலைகோதியிருக்கலாம், நண்பனாக உங்களுடன் சேர்ந்து அழுதிருக்கலாம், சிரமம் மிகுந்த காலங்களில் உங்கள் கைபிடித்து நடந்திருக்கலாம், மனதில் உட்கார்ந்து கொண்டு வழிநடத்தியிருக்கலாம்.
பெப்பியான “உன்னை நான் பார்த்தது”, சில்லென்ற “இளைய நிலா பொழிகிறது” பாடல்களெல்லாம் எனது நன்னாட்களை மேலும் அழகாக்கியிருக்கிறது. உறக்கமற்ற இரவுகளில், தலையணைக்குள் முகம் புதைத்து வைத்த நாட்களில், ”நிலாவே வா”, ”வண்ணம் கொண்ட வெண்ணிலவே” பாடல்கள்தான் தங்கள் மடியில் என்னைத் தூங்கவைத்தன.
எஸ்.பி.பி பாடாத உணர்வே இல்லை. என்பதுகளில் பின்னணி பாடல் என்னும் துறையை ஒற்றை ஆளை ஆண்டிருக்கிறார். சங்கராபரணம் முதல் சலங்கை ஒலி வரை, இதற்கு ஒராயிரம் உதாரணங்களும் கூடவே. பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் ”ஏ ஆத்தா”,கிழக்குச் சீமையிலேவில் “மானூத்து மந்தையிலே” என எதுவாகினும், நாட்டுப் பாடல்களின் சுவையை அநாயாசமாக கையாண்ட விதத்தை என்னவென்று சொல்வது. இனிய ‘இளைய நிலா’, பேச்சுவழக்கில் அழகாக வடித்த ‘ஏ ஆத்தா’, மெல்லிசையில் ‘மணி ஓசை கேட்டெழுந்து’, கண்ணீரில் நகர்த்திவிடும் ‘வைகரையில்’என ஒவ்வொன்றும் உங்களுக்குள் உணர்வுகளைக் கடத்துபவை.
சலங்கையின் ஒலியின் ’மெளனமான நேரம்’, உங்களுக்கு அன்பை உணர்த்தாமலோ, ’என்ன சத்தம் இந்த நேரம்’ உங்கள் கண்ணில் நீரை வரவழைக்காமலோ இருந்தால், உங்களது இதயம் கொஞ்சம் கடினமானதுதான். எஸ்.பி.பியின் குரல் உங்களுக்கு அவ்வளவு கொடுத்திருக்கும், உங்களில் இருந்து அவ்வளவை எடுத்திருக்கும்.
கேளடி கண்மணி திரைப்படத்தில், ’மண்ணில் இந்த காதலன்றி’யை மூச்சு விடாமல் பாடிய சாதனை நம்மைக் கொஞ்சம் சுவாசிக்க வைக்கும். இசையை உங்களுக்குள் கடத்துவதற்கு மொழிகள் தடையில்லை என்பதை ஹிந்தியில் பாடும்போது புரியவைத்திருக்கிறார். எஸ்.பி.பியின் குரல் மட்டுமா இத்தனை வசீகரத்திற்கும் காரணம்? இல்லை. எப்போதும் உயிர்த்திருக்கும் பாடல்களுக்கான பாவனையும் தான். சிகரம் திரைப்படத்திற்காக அவர் இசையமைத்த 15 பாடல்களும் பெருவெற்றியைப் பெற்றன.
சிகரம் திரைப்படத்தின் பாடல்கள் வாழ்வின் மடியில் மகிழ்ந்திருப்பவனையும், இழந்து நிற்பவனையும், ஒரே அலைவரிசையில் அவரவருக்கான உணர்வுகளுடன் தொட்டிருக்கும். சிகரத்தின் அத்தனை பாடல்களையும் ஒவ்வொரு உணர்வுநிலையிலும், இசையை மட்டும் கோர்க்காமல் உணர்வுகளையும் சேர்த்தே கோர்த்திருப்பார்.
’எஸ்.பி.பியின் குரல் உங்கள் ஆன்மாவைத் தொடும்’ எனும் வார்த்தைகள், சக கலைஞர்கள் ஒரே குரலில் அவருக்கு செய்த மரியாதை. எஸ்.பி.பியின் குரல், தமிழ் மனங்களின் பகுதி, நவீன தமிழ் கலாச்சாரத்தின் பகுதி, சாமான்ய தமிழ் வாழ்வின் ஒரு அத்தியாயம்.
எல்லாவிதமான அசகாய வித்தைகளுக்கும் அப்பாற்பட்டு, எஸ்.பி.பியை கொண்டாட வைக்கும் ஒரு சிறப்புத் தகுதி அவருக்கிருக்கிறது. பாடலையும் மீறி, கேட்கும் நபரோடு, ஒரு புள்ளி அதிகமாக தன்னை இணைத்துக்கொண்டு, இது எனக்காக பாடப்பட்டதுதான் என உணரவைக்கும் ஸ்பரிசம்தான் அது. எஸ்.பி.பியின் பல பாடல்களால் நான் மகிழ்ந்திருந்தாலும், உன்னை நான் பார்த்தது பாடலில், ”நான் உனக்காகவே பாடுவேன், கண் உறங்காமலே பாடுவேன்” என்னும் வரிகள் என்னை நோக்கியே பாடுவதாய் உணர்வேன். உறங்காமல் அவர் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பார். நானும், என்னைப்போலவே பலரும், ஆற்றும் அவரது போர்வைக் குரலின் கதகதப்பில் உறங்கிப்போவோம். இப்போதைய இந்த உணர்வை, எந்த வார்த்தையும் உணர்த்தாது. இது சேவை - இந்த சேவைக்கு எந்த விருதும் நியாயம் செய்துவிட முடியாது.
நன்றி: DTNEXT
DTNEXT இதழுக்காக,
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்
தமிழில் : ம.குணவதி