
சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்தது.அத்துடன் வில்சன் உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்துள்ளன.
கேரள காவல்துறை கொடுத்த தகவல்களின்பேரில் விசாரணை நடத்திவரும் தமிழக தனிப்படை அதிகாரிகள், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், காவல்துறையில் 36 ஆண்டு காலம் பணியாற்றியவர்.
வில்சன் சுட்டுக் கொல்லப்பட காரணம் என்ன? இதற்கு பின்னணியில் சமூக விரோத கும்பல்களின் சதிச் செயல் உள்ளதா? என பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.