[X] Close

ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...!

சினிமா

Movie-For-Rajini-Fans---Darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்த தர்பார் இன்று திரைக்கு வந்திருக்கிறது.


Advertisement

மும்பை பற்றி தமிழில் ஒரு படமெடுத்தால் அது போதைப்பொருள் கடத்தல் மற்றும் தாதாக்களின் சாம்ராஜ்யம் பற்றியதாகவே இருக்கும் என்பதற்கு தர்பாரும் விதிவிலக்கல்ல, மும்பை இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கின்றனர். மும்பை கமிஷ்னராக பொறுப்பேற்கும் ரஜினிக்கு மாபிஃயாவை கட்டுப் படுத்தும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே பல போலீஸ் அதிகாரிகளின் உயிரை பறித்திருக்கிறது அந்த மாஃபியா கும்பல். அதனால் போலீஸ் வேலைக்கே பலரும் வர பயப்படும் நிலையில் ஒரு பலவீனமான போலீஸ் படாலியனை வைத்து போதைப் பொருள் வணிக மாபிஃயாவை ரஜினி எப்படி வேட்டையாடினார் என்பதுதான் கதை. படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் நடித்திருக்கிறார் ரஜினி.

image


Advertisement

ரஜினியும் நயன்தாராவும் சந்திக்கும் காட்சிகளில் பின்னனி இசை அட்டகாசம், சண்டைக்காட்சிகளில் பாட்சா படத்தின் ஒரு மியூசிக் நோட்டை எடுத்து கலந்து அடித்திருக்கிறார்கள், அந்த ஐடியா நன்றாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. முதல் பாதியில் விறுவிறு திரைக்கதையால் ரசிகர்களை ஆட்சி செய்யும் தர்பார் இரண்டாம் பாதியில் படு ஸ்லோ.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இதனை முழுக்க முழுக்க ரஜினியின் படமாக அணுகியிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதனால் தான் வழக்கமாக ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் இருக்கும் இண்ட்ரஸ்டிங் விஷயங்கள் ஏதும் இல்லாமல் ப்ளாட்டாக போகிறது திரைக்கதை. சசிகலா கர்நாடக சிறையிலிருந்து ஷாப்பிங் போனதாக வந்த செய்திகளை குறிப்பிட்டு சில இடங்களில் கலாய்த்திருக்கிறார்கள். இருக்கட்டும் இருக்கட்டும்.

image


Advertisement

வில்லன், மும்பை போலீஸ் அதிகாரிகள் பலரை தன் அடியாட்களால் சுட்டு வீழ்த்துகிறார். அதற்கு அவர்கள் கிரேடுக்கு தகுந்த சன்மானத்தையும் வழங்குகிறார். அடியாட்கள் குருவி சுடுவதைப்போல போலீஸ்காரர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இது நம்பும் படியாக இல்லை என்பது வேறு. ஆனால் இப்படியான காட்சிகளை தவிர்ப்பது சமூகத்திற்கு நல்லது. இது ஒரு தவறான முன் உதாரணம். இப்படியான காட்சிகளை சென்சார் போர்டு அனுமதித்திருக்கக் கூடாது என்பதே பலரது கருத்தும் கூட.

ரஜினியின் மகள் நிவேதா தாமஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை துளியும் வீணடிக்காமல் அடித்து ஆடி இருக்கிறார். நடிப்பில் ரஜினிக்கு அடுத்து பாஸ்மார்க் வாங்குவது நிவேதா தாமஸ்தான். நயன்தாரா ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு இக்கதையில் இல்லை என்பதுதான் உண்மை. என்றாலும் அவர் திரையில் தோன்றினாலே போதும் சார் என நினைக்கும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய குறையாகத் தோன்றாது. இறுதிக் காட்சிதான் படத்தையே தாங்கி நிற்கப்போகும் மாஸ் காட்சி என எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த திருப்தியை கொடுக்கவில்லை அது. சுனில் ஷெட்டி ரஜினி மோதிக் கொள்ளும் காட்சி பலவீனம்.

image

பாடலின் பின்னணியில் ரயில் நிலைய சண்டைக் காட்சியொன்றை அமைத்திருக்கிறார்கள். இக்காட்சி அட்டகாசம்; அந்த ஐடியா நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இக்காட்சியின் ஒளிப்பதிவு லைட்டிங் ஸ்டெயிலில் சந்தோஷ் சிவன் கெத்து காட்டியிருக்கிறார், தளபதிக்கு பிறகு ரஜினியும் சந்தோஷ் சிவனும் இணைந்து வேலை செய்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் உடல் மற்றும் மனதகுதியை நிரூபித்தால் தான் மேற்கொண்டு பணியை தொடர முடியும் என்ற சூழலில் ரஜினி நான்கு நாட்களில் உடற்பயிற்சி செய்து தன்னை தயார் செய்கிறார். இத்தனை செயற்கையான அணுகுமுறை இன்னமும் தமிழ் சினிமாவில் புழக்கத்தில் இருக்கிறது என்பது வேதனை.

image

ஒரு காதல் காட்சி, ஒரு வில்லன் - போலீஸ் காட்சி, அடுத்து நிவேதா தாமஸ்,யோகிபாபு மற்றும் ரஜினி ஆகியோர் பேசும் காட்சி என சீட்டுக் கட்டை போல முன்பாதியின் திரைக்கதையை எடிட் செய்திருப்பது இன்னுமே தமிழ் சினிமா வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றே காட்டுகிறது. பொதுவாக ரஜினி படங்களில் ரஜினி பேசும் ஏதாவது ஒரு பன்ச் வசனம் ஹிட் ஆகும். இப்படத்தில் அப்படி குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை. ரஜினியின் ஸ்டைலும் மிஸ்ஸிங். இது ரஜினி படமாகவும் இல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் படமாகவும் இல்லாமல் குழப்ப கிச்சடியாக இருக்கிறது. என்றாலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் அவருக்கேயான பேமிலி ஆடியன்ஸை இப்படம் ஏமாற்றவில்லை. எந்த ஆச்சர்ய எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தை சென்று பார்த்தால் திருப்தியான ஒரு கமர்ஸியல் படத்தை பார்த்த அனுபவம் கிடைக்கும்.

Related Tags : darbarnayantharaar murugadossrajinikanthdarbar review

Advertisement

Advertisement
[X] Close