கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை- அமைச்சரை ஒருமையில் பேசியதால் நடவடிக்கை

கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை- அமைச்சரை ஒருமையில் பேசியதால் நடவடிக்கை
கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை- அமைச்சரை ஒருமையில் பேசியதால் நடவடிக்கை

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு சபாநாயகர் தடை விதித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய வேலுமணியை ‘உட்கார்’ என ஜெ.அன்பழகன் கூறியதாக தெரிகிறது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதையடுத்து துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து ஜெ.அன்பழகன், அமைச்சரை ஒருமையில் பேசியதாகவும் கை நீட்டி பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் “ஜெ.அன்பழகன் இதுபோன்ற செயல்களில் அடிக்கடி செயல்படுகிறார். அரசு ரீதியாகவோ, அல்லது கட்சி ரீதியாகவோ கேள்வி எழுப்பினால் பதிலளிக்க நாங்கள் தயார். ஆனால் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது ஏற்க முடியாது. எனவே அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என தீர்மானம் கொண்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் எழுந்து நின்று ஜெ.அன்பழகனின் நடவடிக்கைக்கு அவையில் வருத்தம் தெரிவித்தார். பின்னர், சற்று அமைதியானது. ஆனால் தீர்மானம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசியதால் அன்பழகனுக்கு தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அவைக்கு குந்தகம் விளைவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ.அன்பழகன், “நான் பேசும்போது அமைச்சர்கள், சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டனர். எதில் முதலிடம் என கேட்டதற்கு முதலமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். என் பேச்சுக்காக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்த பிறகும் பிரச்னை செய்கின்றனர்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com