Published : 07,Jan 2020 05:50 AM
ஓய்வு பெறுவதற்கு முன் மலிங்காவிற்கு இருக்கும் ஒரே ஆசை...!!!

டி20 உலகக் கோப்பையில் நாக்-அவுட் சுற்று விளையாடுவதே தனது ஒரே இலக்கு என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. இவர் தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்கர் பந்துவீச்சினாலும் பிரபலமானார். இலங்கை அணிக்காக பல நேரங்களில் சிறப்பாக பந்து வீசி உள்ளார். தனது பந்து வீச்சின் மூலம் அணியை பலமுறை வெற்றிப் பெறவும் வைத்துள்ளார். அத்துடன் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் டி20 போட்டிகளில் மட்டும் இலங்கை அணியை வழி நடத்தி வருகிறார்.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறுகின்றன. அதன்படி முதல் டி20 போட்டி அசாமில் உள்ள கவுகாத்தியில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு தொடங்கயிருந்தது. இதற்கான டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கவுகாத்தியில் பெய்த தொடர் மழையால் போட்டி ரத்தானது. இதைத்தொடர்ந்து இந்தூரில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா-இலங்கை இடையே இதுவரை 16 சர்வதேச டி20 போட்டி நடைபெற்றுள்ளது. இதில், இந்தியா 11 போட்டிகளிலும் இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், மலிங்கா தனது ஓய்வுக்கு முன் இருக்கும் ஒரே ஒரு ஆசை குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். இப்போது இலங்கைக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நான் செய்ய தயாராக இருக்கிறேன். நான் விளையாடியது போதும் என அவர்கள் சொன்னால், நான் ஓய்வு பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால் டி 20 உலகக் கோப்பையில் நாக்-அவுட் சுற்று விளையாடுவதே எனது ஒரே இலக்கு. நாக் அவுட்களுக்கு இலங்கை தகுதி பெற்றால், அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவதை நான் பொருட்படுத்த மாட்டேன். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் அனுபவம், வரும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பேசிய மலிங்கா, இளம் வீரர்களை வழிநடத்தினாலும், சிறந்த ஆட்டத்தை தங்களால் வெளிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். “புத்தாண்டில் புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். டி 20 என்பது கணிக்க முடியாத வடிவம். யார் சிறந்தவர் என்று எங்களால் கணிக்க முடியாது. ஒரு ஓவரில் யார் வேண்டுமானாலும் வேகத்தை மாற்றலாம். நான் இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறேன். அவர்கள் திறமையானவர்கள், ஆனால் அனுபவம் இல்லாதவர்கள். எங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான முக்கியமான தொடர் இது. காயம் காரணமாக ஓய்விலிருந்து அணிக்கு திரும்பும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை இலங்கை குறிவைக்கும்” எனவும் மலிங்கா தெரிவித்தார்.
2020-ம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆண்கள் டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்குகிறது. ஜீலாங்கில் அயர்லாந்துக்கு எதிராக இலங்கை முதல் ஆட்டத்தை விளையாடுகிறது.