Published : 06,Jan 2020 10:12 AM
‘குரூப் - 4’ தேர்வு குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

‘குரூப் 4’ தேர்வில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
‘குரூப் 4’ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான, நிலையில் ஓரே மாவட்டத்தை சேர்ந்த மையங்களில் தேர்வெழுதியவர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதாகவும், முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு மையங்களில் தேர்வெழுதியவர்கள் முன்னிலை வகிப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டது.
2017-ல் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடா?
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தங்களின் நேர்மையான செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் என்றும், தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுவரை தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதிகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.